பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் சஜித் பிரேமதாச கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட அனுமதி கோரிய நிலையில் அதற்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்திருக்கின்றார்.
பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் போது நாடு முழுவதும் தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக பயணிக்க வேண்டியுள்ளதால் கொழும்பிலிருந்து செயற்படுவதன் மூலமே அது சாத்தியப்பட முடியுமெனத் தெரிவித்திருக்கும் சஜித் பிரேமதாச இந்தத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு கட்சித் தலைமையிடம் கோரியுள்ளார்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க சஜித்தின் கோரிக்கை தவறானதல்லவெனவும், வரவேற்கக் கூடியதெனவும் அவரால் கடினமின்றி வெற்றி பெறக் கூடிய மாவட்டமாக கொழும்பு மாவடத்தைக் கருதுவதாகவும் கூறியுள்ளார்.
அதே சமயம் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தான் விரும்பும் ஒருவரை நிறுத்த சந்தர்ப்பமளிக்குமாறு விடுத்த சஜித்தின் அடுத்த கோரிக்கையையும் சாதகமாக பரிசீலிப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார்.