இலங்கையின் சுதந்திரதின நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்படவுள்ளதாக முன்னெடுக்கப்பட்டுவரும் பிரசாரம் பொய்யானது. அது குறித்து இதுவரை அமைச்சரவையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லையென கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டு சுதந்திர தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், சுதந்திர தின நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படவுள்ளதாக அமைச்சர் ஜனக பண்டார தென்கோன் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
அரசாங்கம் அவ்வாறான தீர்மானமொன்றை எடுத்திருந்தால் அதற்கு கடும் கண்டனத்தை வெளியிடுவதாக தமிழ் அரசியல் தலைமைகள் சுட்டிக்காட்டியதுடன், முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் ஜனாதிபதிக்கு கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்.
சுதந்திரதின நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரம்தான் தேசிய கீதத்தை இசைக்க வேண்டுமென்ற தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளதா? என அமைச்சர் டளஸ் அழகப்பெருமவிடம் வினவிய போது, இல்லை என்று கூறியவர், அவ்வாறு எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லை. போலியான செய்திகளே பரப்பப்பட்டு வருகின்றன. அமைச்சரவைக்கூட கூடாதுள்ள சந்தர்ப்பத்தில் எவ்வாறு அத்தகை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூற முடியும்? தமிழ் மொழியில் தேசிய கீதம் படாப்படாதென்ற எவ்வித தீர்மானமும் இதுவரை அமைச்சரவையில் எடுக்கப்படவில்லையென்றார்.