வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு காரணம் தமிழரசுக் கட்சியே. நிலைமை இவ்வாறிருக்கும் போது வடக்கு கிழக்குக்கு வெளியே தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வருகின்றன. தயவு செய்து அவர்களையாவது நிம்மதியாக வாழவிடுங்கள் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஏதோ ஓரளவு வறுமையான வாழ்விலும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் செம்மையாக வாழ்ந்து வருகின்றார்கள். அதுமட்டுமல்ல பலவருடங்களாக அரும்பாடுபட்டு உருவாக்கிய பல தொழிற்சங்கங்கள் இன்றும் அங்கு பலமாகவே இருக்கின்றன. காலத்திற்குக் காலம் மாறி மாறி வரும் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் மூலம் அமைச்சுப்பதவிகளைப் பெற்றுத் தங்கள் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றார்கள்.
அங்குள்ள தலைவர்கள் அந்த மக்களின் பிரச்சனைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்வார்கள். 28 வருடங்களாக இயங்காமலிருந்த தமிழரசுக் கட்சியை தூசுதட்டி ஒரு சிலரின் பதவி மோகங்களுக்காக விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தி 2004 ஆம் ஆண்டுத் தேர்தலில் சாதித்தது என்ன? இணைந்த வடகிழக்கு பிரிக்கப்பட்டபோது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அதேபோல சர்வதேசமே பார்த்து வியந்துபோன விடுதலைப் புலிகள் அமைப்பு அழிந்துபோன போதும் அமைதியாக வேடிக்கைபார்த்துக் கொண்டு இருந்தார்கள். அத்துடன் முள்ளிவாய்க்கால் போரில் மக்களின் வாழ்வும், சொத்துக்களும் நாசமாகிய போதும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் மக்களின் பலமான விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டது நல்ல விடயம் என்று இப்போது தான் திருவாளர் சம்பந்தன் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
தந்தை செல்வா அவர்கள் 1949 இல் உருவாக்கிய தமிழரசுக்கட்சி வேறு. இப்போதுள்ள தமிழரசுக் கட்சிவேறு. 1972 இல் தந்தை செல்வா அவர்கள் ஜீ.ஜீ.பொன்னம்பலத்துடன் மலையகத் தலைவர் அமரர். சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களுடனும் இணைந்து தலைமையைப் பகிர்நது கொண்ட கட்சியே தமிழர் விடுதலைக் கூட்டணி. இந்த நிலையில் இன்றுள்ள தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டால் ஆமை புகுந்த வீடாகிவிடக் கூடாது.
நல்லாட்சி அரசுக்கு முண்டுகொடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றவர்கள் யாரேனும் ஒரு அரசியல் கைதியையாவது விடுதலை செய்ய முற்பட்டார்களா? வடக்கு கிழக்குக்கு வெளியேவாழும் தமிழர்களை கை, கால்கள் சேதமடையாமல், துப்பாக்கிக் குண்டுகளுக்கும் இரையாகாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என இருக்கவிட்டாலே போதும். தமிழரசுக் கட்சி தன் இருப்பைத் தக்கவைக்க அந்த அப்பாவி மக்களை பகடைக் காய்களாக்காமல் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
——
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.
5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம் அவருடைய கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வைத்தியசாலையில் சிகிச்சைகள் பெற்று வெளியேறியதன் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
——
ஜனாதிபதி தேர்தல் காலத்திற்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய பிரிவினரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.
கேகாலை பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பிணைமுறி மோசடி தொடர்பிலும் MCC ஒப்பந்தம் தொடர்பிலும் கதைத்தாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று அந்த விடயங்கள் தொடர்பில் எந்தவொரு கதையும் இல்லை எனுவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய பிரிவினரை உடனடியாக கைது செய்யமாறு தெரிவித்த அவர், சிங்கபூரிற்கு சென்று அர்ஜுன் மஹேந்திரனை அழைத்து வருமாறும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் கூறிய எந்தவொரு நடவடிக்கையையும் செய்யாமல் இன்று சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித சேனாரத்னவின் பின்னால் ஓடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
——-
மட்டக்களப்பு வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 25ஆம் திகதி தாய்ப்பால் ஊட்டத் தயாரானபோது மரணித்த குழந்தையின் சடலம் 5நாட்கள் கடந்த நிலையிலும் சட்ட வைத்திய பரிசோதனை நடாத்தப்படாமல் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஷ் ஆனந்தன் தெரிவித்தார். பாம் கொளனி மாங்கேணியைச் சேர்ந்த சவுந்தரி பாலசுந்தரம் தம்பதியினரின் ஒரு வயதான பாலசுந்தரம் ஷாலினி என்ற குழந்தைக்கே இக்கதி நேர்ந்துள்ளது.
இந்தக் குழந்தை கடந்த 25ஆம் திகதி அதிகாலை 4மணிக்கு உறங்கிய நிலையில் மரணித்திருந்தது.
தாய் குழந்தைக்கு தாய்ப்பாலூட்ட தயாரானபோது குழந்தை உறக்கத்திலேயே சளி அடைத்த நிலையில் மரணித்திருந்ததாக குழந்தையின் தாயான கந்தையா சவுந்தரி தெரிவித்துள்ளார்.
அன்றைய தினமே வாகரைப் பொலிஸாரின் உதவியுடன் மரணித்த குழந்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
ஆயினும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் கடமையில் இல்லாததால் குழந்தையின் உடற் கூறாய்வுப் பரிசோதனையை மேற்கொள்ள முடியாத நிலை அங்கு காணப்படுகிறது.
இதனால் நீதிபதியின் உத்தரவின் பேரில் திருகோணமலையிலுள்ள சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக குழந்தையின் சடலம் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று (29) ஞாயிற்றுக்கிழமை வரையில் குழந்தையின் இறப்பு பற்றிய உடற் கூறாய்வுப் பரிசோதனைகள் இடம்பெறவில்லை எனத் தெரியவருகின்றது.
இதனிடையே இக்குழந்தையின் பெற்றோர் அடிமட்ட வறுமை நிலையிலுள்ளவர்கள் என்பதால் குழந்தையை அரச செலவில் எங்காவது அடக்கம் செய்யுமாறு இரந்து நின்றதாக திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஷ் ஆனந்தன் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை, இறந்த குழந்தையை வாழைச்சேனை நீதிபதியின் உத்தரவுக்கமைய சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட வேண்டிய உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக திருகோணமலைக்கு கொண்டு சென்றபோது அங்குள்ள வைத்தியசாலை நிருவாகத்திலுள்ள ஒரு சிலர், குழந்தையின் சடலத்தை மட்டக்களப்புக்கு சமீபத்திலுள்ள அம்பாறை மாவட்டத்தின் அம்பாறை நகர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாமல் ஏன் திருகோணமலைக்கு எடுத்து வந்தீர்கள் என கடிந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இது நீதிபதியின் உத்தரவு என்றதும் அவர்கள் குழந்தையின் சடலத்தைப் பொறுப்பெடுத்ததாகவும் கூறப்படுகிறது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இதுவரை கடமையிலிருந்த வெளி மாவட்டத்தைச் சேர்ந்த சட்ட வைத்திய அதிகாரியான எஸ்.எம்.டி பிரசாதினி செனரத் எனும் வைத்தியர் கடந்த இம்மாதம் (15) அன்று சட்ட வைத்தியத்துறை மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் நோக்கில் விலகிச் சென்றதன் பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி இல்லாத குறை நிலவி வருவதும் அதனால் சந்தேகத்திற்குரிய மரணங்கள் தொடர்பாக சட்ட வைத்திய விடயங்களைக் கையாள முடியாத நிலையில் உறவினர்கள் அலைக்கழிந்து திரிவதுமாக உள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகளிடையே மனிதாபிமான உணர்வுகள் மரணித்து விட்டதோ என எண்ணத் தோன்றுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை வெளியிடுகின்றனர்.