30.12.2019 : அமெரிக்க குடியுரிமையுடன் இந்தியர்கள் ஆர்பாட்டம் !இந்தியா ருடே..!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய வம்சாவளியினர் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் பேரணியாக திரண்டனர்.

நாடு முழுவதும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த வாரம் தீவிர போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் சில இடங்களில் வன்முறையாக வெடித்தது.

நாட்டின் தலைநகர் டெல்லியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், பல பகுதிகளில் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.

உத்தரபிரதேசத்தின் லக்னோ, அலிகார் பகுதிகளில் நடந்த போராட்டம் மாநிலம் முழுவதும் பரவி பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைத்தும், போலீசார் மீது கற்களை வீசியும் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். சில இடங்களில் ரப்பர் குண்டுகள் மூலம் போலீசார் சுட்டனர்.

இந்த போராட்டத்தில் 19க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 260க்கும் அதிகமான போலீசார் காயம் அடைந்தனர். 218 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோன்று, குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்புக்கு எதிராக பீகார் மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியான ராஷ்டிரீய ஜனதா தளம் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இதன்பின்னர் வடகிழக்கு மாநிலமான அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் அமைதி திரும்பியது. அசாமில் அமைதியான முறையில் சில இடங்களில் ஊர்வலங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பாரதீய ஜனதா சார்பில் ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.

இதேபோன்று மராட்டியத்தின் நாக்பூர் நகரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக லோக் அதிகார் மஞ்ச், பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிற அமைப்புகளும் பேரணியாக சென்றன. மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் பேரணி நடத்தப்பட்டது.

நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டம் மற்றும் பேரணி நடத்தப்பட்ட நிலையில், வெளிநாடுகளிலும் இந்த சட்டம் பற்றி பரவலாக பேசப்பட்டு உள்ளது. இதன்படி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய வம்சாவளியினர் பேரணியாக திரண்டனர்.

குடியுரிமை திருத்த சட்டம் மனித உரிமைகள் பற்றியது. சிறுபான்மையினரை படுகொலை செய்ய தெய்வ நிந்தனை சட்டத்தினை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது, கடந்த 1947ம் ஆண்டில் 23 சதவீதம் என்ற அளவில் இருந்த சிறுபான்மையினர் இப்பொழுது 1 சதவீதம் அளவிலேயே உள்ளனர் என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி அவர்கள் திரண்டு இருந்தனர்.

——

டெல்லியில் கடும் குளிரால் ரெயில், விமான சேவை பாதிப்படைந்து உள்ளதுடன் பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனர்.

நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் குளிர் காலம் கடுமையாக மக்களை பாதிப்பிற்கு ஆளாக்கியுள்ளது. இவற்றில் குறிப்பிடும்படியாக டெல்லியில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 2.5 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது.

இதனால் அனந்த் விகார் அருகே பேருந்து நிலையத்தில் இரவில் மக்கள் தஞ்சமடைந்தனர். கடும் குளிரால் விமான சேவையும் பாதிப்படைந்தது. 3 விமானங்கள் மாற்றி விடப்பட்டுள்ளன.

கடும் குளிரால் தெளிவற்ற வானிலை ஏற்பட்டுள்ள நிலையில், புதுடெல்லி ரெயில் நிலையத்திற்கு 30 ரெயில்கள் காலதாமதத்துடன் வந்து சேரும் என வடக்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

டெல்லியில் காற்று தர குறியீடும் அனந்த விஹார் மற்றும் ஓக்லா பேஸ் 2 ஆகிய பகுதிகளில் முறையே 462 மற்றும் 494 என கடுமையான பிரிவில் பதிவாகி உள்ளது.

——–

இன்னும் 3 ஆண்டுகளுக்கு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள் என்று ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமர் மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அகில இந்திய வானொலியில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதுபோல், அந்த நிகழ்ச்சியில் நேற்று அவர் பங்கேற்றார். இந்த ஆண்டின் கடைசி நிகழ்ச்சியான அதில் அவர் பேசியதாவது:-

நம் நாட்டு இளைஞர்கள் நமது அமைப்புமுறையில் நம்பிக்கை கொண்டவர்கள். ஆனால், அது முறையாக இயங்காதபோது ஆவேசமாக கேள்வி கேட்பார்கள். இதை நான் நல்ல விஷயமாக கருதுகிறேன்.

நமது இளைஞர்கள், அராஜகத்தையும், ஒழுங்கீனத்தையும், ஸ்திரமற்ற தன்மையையும் வெறுக்கிறார்கள். சாதியம், குடும்பத்துக்கு சலுகை காட்டுதல் ஆகியவையும் அவர்களுக்கு பிடிப்பது இல்லை. அடுத்த 10 ஆண்டுகளில் நவீன இந்தியாவை கட்டமைப்பதில் இளம் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.

விமான நிலையங்களிலோ, சினிமா தியேட்டர்களிலோ யாராவது வரிசையை தாண்டி முன்னே சென்றால், அதை தட்டிக்கேட்பது இளைஞர்கள்தான். அத்துடன், அதை வீடியோ எடுத்து உடனே பரவச் செய்கிறார்கள்.

சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த கன்னியாகுமரியில் உள்ள கற்பாறைக்கு இளைஞர்கள் செல்ல வேண்டும். அதன்மூலம், ஏழைகளுக்கு பாடுபடும் உணர்வைப் பெற வேண்டும்.

உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்குமாறு எனது சுதந்திர தின உரையில் வேண்டுகோள் விடுத்தேன். அதை மீண்டும் தெரிவிக்கிறேன். நாட்டு மக்கள் அனைவரும் உள்நாட்டு தயாரிப்புகளையே வாங்க வேண்டும். 2022-ம் ஆண்டு நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அதுவரையாவது, இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு உள்நாட்டு தயாரிப்புகளை மட்டுமே வாங்குவோம் என்று நாம் உறுதி எடுத்துக் கொள்வோம்.

உள்நாட்டு தயாரிப்புகள், நமது மக்களின் வியர்வை மணம் வீசுபவை. மகாத்மா காந்தி, 100 ஆண்டுகளுக்கு முன்பே, இந்திய பொருட்களையே வாங்க ஊக்குவிக்கும்வகையில் மாபெரும் இயக்கம் தொடங்கினார். அவர் காட்டிய வழியில் நாம் செல்வோம். உள்நாட்டு பொருட்கள் வாங்குவதை ஊக்குவிக்க இளைஞர்கள், சிறு அமைப்புகளை உருவாக்கி மக்களிடையே இதன் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும்.

கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருந்தது. எம்.பி.க்கள் அந்த அளவுக்கு உண்மையாக செயல்பட்டனர். கடந்த 60 ஆண்டுகால சாதனைகளை முறியடித்து விட்டனர். நள்ளிரவுவரை கூட நாடாளுமன்றம் செயல்பட்டது. இதற்காக இரு சபைகளின் தலைவர்களும், அனைத்து எம்.பி.க் களும் பாராட்டுக்கு உரியவர்கள்.

விண்வெளித் துறையில் இந்தியா நன்றாக முன்னேறி உள்ளது. அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தி உள்ளது.

புதிய புத்தாண்டு பிறக்கப் போகிறது. இது புதிய உறுதியையும், சக்தியையும், உற்சாகத்தையும் அளிக்கட்டும். நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. நாட்டு மக்களை புதிய உயரத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டி உள்ளது. அதற்கு உறுதி எடுத்துக் கொள்வோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Related posts