கடந்த அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், கடந்த ஒரு மாதக்காலப்பகுதியில் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறைக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுத்து அதனை மேம்படுத்த முடிந்துள்ளது.
ஒரு மாதக்காலப்பகுதியில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் பெரும்பான்மை இல்லாத அரசாங்கத்தினால் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டு இதுவரை நிறைவேற்றப்படவில்லை. நாம் தற்போதும் பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகிறோம்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்றதன் பின்னர்தான் பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் ஒன்றை கொண்டு வந்து நாட்டு மக்களுக்கு சேவையாற்ற முடியும். எவ்வாறாயினும் கிராம உத்தியோகத்தர் பிரிவொன்றிற்கு 20 இலட்சம் ரூபாய் நிதி, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வழங்கப்படவுள்ளது.
இவ்வருடத்தின் ஜனவரி, பெப்ரவரி காலப்பகுதியில் பாரியளவில் வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுக்க வேலைத்திட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கடந்த ஒரு மாதக் காலப்பகுதியில் பாரிய வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
5 வருடங்களில் நினைத்து பார்க்க முடியாத வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியும் என நம்புகிறோம்.
கடந்த அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாகவே பொருட்களின் விலைகள் அதிகரித்தன.
ஒரு மாதக்காலப்பகுதியில் எமக்கு அதனை குறைக்க முடியாது. நாடு சீரழிக்கப்பட்டுள்ளது. விவசாயம் அழிக்கப்பட்டுள்ளது. இன்று மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. அத்துடன் கடந்த கால பொருளாதார கொள்கை காரணமாக நாடு வீழ்ச்சியடைந்துள்ளது. அவற்றைதான் நாம் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றோம் என்றார்.