லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 64-வது திரைப்படத்தின் பெயர் “மாஸ்டர்” என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் படத்தை தொடர்ந்து, விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பெயர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தளபதி 64′ என்று அழைத்து வரப்பட்ட இந்தப் படத்துக்கு ‘மாஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
——-
தமிழரசன் என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் விஜய் ஆண்டனி நாயகனாகவும் ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடித்துள்ளனர். பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். கவுசல்யா ராணி தயாரித்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவில் டைரக்டர் பாரதிராஜா கலந்து கொண்டு பேசியதாவது:- “விஜய் ஆண்டனி ஒரு ஆச்சரியமான முகம். ரொம்ப சாதாரணமாக இருப்பார். ஆனால் படத்தில் வேற மாதிரி தெரிகிறார். நல்ல இசை அமைப்பாளர். இப்போது நல்ல நடிகர். தமிழரசன் என்ற பெயர் படத்துக்கு பொருத்தமாக உள்ளது. இளையராஜாவை மிஞ்சுவதற்கு இனி ஒரு இசை அமைப்பாளர் பிறந்து வந்தாலும் முடியாது.
படத்தை ஒன்றுமே இல்லாமல் எடுத்துக் கொடுத்தாலும் அந்தப்படத்திற்கு உயிர் கொடுத்து விடுவார் இளையராஜா. பேசாத படத்தை பேச வைத்தவர் இளையராஜா. அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் இசைக்கு ஈடு இணையில்லை. பெப்சி சிவா தேர்ந்தெடுத்த இயக்குனர் என்பதால் பாபு யோகேஸ்வரன் நல்ல இயக்குனராகத்தான் இருப்பார்.
இனி வரும் இளம் இயக்குனர்கள் வன்முறை இல்லாமல் படம் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழரசன் நல்லபடம். இந்த படம் பெரிய வெற்றி பெறும்.”
இவ்வாறு பாரதிராஜா பேசினார். விழாவில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், ராதாரவி, இளையராஜா, சுரேஷ் காமாட்சி, பெப்சி சிவா, வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.