குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கும் ( Citizenship Amendment Act) அதனோடு சேர்ந்துவரக்கூடிய தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் (National Register of Citizens) எதிரான போராட்டத்தில் எதிர்பாராத நேசசக்திகளாக இந்தியாவில் எதிர்க்கட்சிகளின் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்கள் வெளிக்கிளம்பியிருக்கிறார்கள். குடியுரிமை திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு ஒரு சில நாட்களில் பஞ்சாப், கேரளா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் அந்த சட்டத்துக்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எதிராக உறுதியான ஒரு நிலைப்பாட்டை எடுத்தார்கள்.
நாடெங்கும் எதிர்ப்பியக்கங்கள் தீவிரமடையத் தொடங்கியதும் ஒடிசா முதலமைச்சர் நவின் பட்நாய்க்கும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரும் குடியுரிமை திருத்தச்சட்டத்தக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். முன்னதாக இவர்கள் இருவரினதும் கட்சிகள் அந்த சட்டத்தை பாராளுமன்றத்தில் வாக்களித்திருந்தன.இதையடுத்து குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்க்கினற மாநில அரசாங்கங்களின எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துவிட்டது.
இந்த எதிர்ப்பின் தாக்கம் மட்டுப்பாடுகளைக் கொண்டதாக இருக்கக்கூடும். குடியுரிமை என்பது மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் வருகின்ற விடயமாகும். அது தொடர்பான சட்டச் செயன்முறைகளைத் தீர்மானிப்பதில மாநிலங்களுக்கு எந்த வகிபாகமும் இல்லை.ஆனால், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணி தொடர்பிலான பொறுப்பு மாநிலங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.தற்போதைய சட்டச் செயனமுறைகளில் குடியுரிமைக்கான விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு இருக்கிறது.அவ்வாறு பரிசீலித்த பிறகு அனுமதிக்காக விண்ணப்பங்களை மாநில அரசாங்கத்தினூடாக மத்திய உள்துறை அமைச்சுக்கு ஆட்சியர் அனுப்பவேண்டும். மேலும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நிருவகிப்பதில் மாநில இயந்திரம் இன்றியமையாததாகும்.
கொள்கையளவில் மாநிலங்கள் குடியுரிமை விணணப்பங்களை பரிசீலனை செய்வதை சுலபமாக நிறுத்தி, தேசிய குடிமக்கள் பதிவேட்டை நிருவகிக்க அவற்றின் நிருவாக இயந்திரத்தை ஈடுபடுத்துவதற்கு மறுத்துவிடலாம் ; அவ்வாறு செய்வதன் மூலம் செயன்முறைகளுக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தலாம்.ஆனால், இங்குதான் சிக்கல் இருக்கிறது.
நடைமுறைப்படுத்தல் விதிகளை மீளவரைந்து, குடியுரிமை விண்ணப்பங்களை கையாளுவதற்கென்று குறித்துரைக்கப்பட்டிருக்கும் அதிகாரிகளுடன் நேரடித்தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதற்கு மத்திய அரசாங்கத்துக்கு அதிகாரமளிக்கும் ஏற்பாடு ஒன்று குடியுரிமை திருத்தச்சட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது — இதன் மூலமாக இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் மாநில அரசாங்கத்தின் அதிகாரத்தை தவிர்த்துவிடமுடியும். இது தவிர, தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு அத்திபாரமாக அமையப்போகின்ற தேசிய சனத்தொகை பதிவேடு (National Population Register) தொடர்பில் பெரும்பாலான மாநிலங்களின் அரசாங்கங்கள் ( மேற்கு வங்கம் தவிர) இன்னமும் நிலைப்பாடொன்றை எடுக்கவில்லை. தேசிய சனத்தொகை பதிவேடு மத்திய அமைச்சரவையால் கடந்தவாரம் அங்கீகரிக்கப்பட்டது.
எது எவ்வாறிருந்தாலும், இந்த எதிர்ப்பு வெளிப்பாட்டின் மூலமான அரசியல் குறியீடு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நரேந்திர மோடி அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சித்திட்டத்துக்கு எதிராக முதலமைச்சர்கள் கூட்டாக வெளிப்படையாக உறுதியான நிலைப்பாட்டை எடுத்து தங்களது சமஷ்டி உரிமைகளை துணிச்சலாக வெளிப்படுத்தியிருப்பது இதுவே முதற்தடவையாகும்.பெரும்பான்மைவாதத்தை நோக்கிய இந்தியாவின் தற்போதைய பயணத்தில் இது ஒரு திருப்புமுனையாக அமையமுடியுமா? குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எதிரான போராட்டம் மேலும் தீவிரமடைந்துவரும் நிலையில், பாரதிய ஜனனதா கட்சியின் மத்தியமய அதிகாரத்துவப்போக்கிற்கு சமவலுவான ஒரு எதிரீடாக மாநிலங்கள் வெளிக்கிளம்புமா ?
2014 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த நாள் முதலாக மோடி அரசாங்கம் ” கூட்டுறவு சமஷ்டி முறை ” ( Co — operative federalism), ” போட்டிக்குரிய சமஷ்டி முறை ” ( Competitive federalism) என்றெல்லாம் அலங்காரப்பேச்சுக்களில் ஈடுபட்டுவருகின்ற போதிலும், அரசியல், நிருவாக மற்றும் நிதியியல் அதிகாரங்களை மத்தியமயப்படுத்துவதிலேயே மிகவும் கவனமாக நாட்டம் காட்டியிருக்கிறது.மாநிலங்களிடமிருந்து பலமான எதிர்ப்பு இதற்கு கிளம்பியதாக இல்லை
2019 மேயில் மீண்டும் பதவிக்கு வந்த பிறகு மிகவும் கூடுதலான அளவுக்கு மத்தியமயத்தை வலிமையாக முன்னெடுப்பதில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது. — குடியுரிமை, அடையாளம் தொடர்பில் ஒரே சீர்மையான கருத்தை ( A unitary notion of citizenship and identity) திணிப்பதில் நாட்டங்கொண்ட போக்காக இது இருக்கிறது. இந்த மார்க்கத்தில் முன்னெடுக்கப்பட்ட முதலாவதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான நடவடிக்கையாக 2019 ஆகஸ்டில் இந்திய அரசியலமைப்பின் 370 வது சரத்து ரத்துச்செய்யப்பட்டமையை கூறமுடியும். அந்த சரத்தின் வாயிலாக ஜம்மு — காஷ்மீருக்கு இருந்த விசேட அந்தஸ்து இல்லாமல் செய்யப்பட்டதற்கு அப்பால், அந்த மாநிலத்தின் அரையளவான சுயாட்சி அந்தஸ்தை யூனியன் பிரதேசமாக தரங்குறைத்த செயல் இந்தியாவின் சமஷ்டி அபிலாசையின் மையக்கோட்பாட்டு அம்சத்தை ( Central tenet of India’s federal aspiration)மலினப்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் பன்மொழி, பல்லின மற்றும் பலமத அடையாளங்களுக்கு அமைதியான முறையில் இடங்கொடுத்து அரவணைப்பதே அந்த அபிலாசையாகும்.
2019 ஆகஸ்ட் நிகழ்வுகளின் பாரதூரத்தன்மையையும் இந்தியாவின் சமஷ்டி அபிலாசையின் சிறப்புப்பண்புக்கு ( Central tenet of India’s federal aspiration ) அவை தோற்றுவித்திருக்கும் சவால்களையும் பொருட்படுத்தாமல், பெரும்பாலான மாநில அரசாங்கங்களும் பிராந்தியக் கட்சிகளும் மோடி அரசாங்கத்தின் தீர்மானத்தை தீவிரமாக ஆதரித்தன.உண்மையில் மத்தியமயத்தை நோக்கிய ஆபத்தானதொரு பயணத்தை இந்தியா மேற்கொண்டிருக்கிறது என்று அந்த நேரத்தில் நான் எழுதினேன்.சமஷ்டிவாதத்தை ஆதரித்தவர்கள் வெகு சிலராகவே இருந்தனர்.மாநில அரசாங்கங்களும் கூட அந்த இலட்சியத்துக்காக போராடத் தவறின.
ஆனால், இந்தப்போக்கிற்கு மறுதலையான போக்கை கடந்த சில வாரங்களாகக் காணக்கூடியதாக இருக்கிறது. நாடு பூராவும் தீவிரமடைந்திருக்கும் எதிர்ப்பியங்கள் உணர்த்துகின்ற மையச்செய்தி பாரதிய ஜனதாவினால் திணிக்கப்படுகின்ற குடியுரிமை பற்றிய ஒரே சீர்மைக்கருத்து திட்டவட்டமாக நிராகரிக்கப்படுகின்றது என்பதும் இந்தியாவின் பன்முகத்தன்மை மீட்டெடுக்கப்படுகிறது என்பதுமாகும்.இந்த மீட்டெடுப்பு உணர்வின் ஊடாகத்தான் இந்தியாவின் சமஷ்டி அபிலாசை மீள் எழுச்சியை காண்கின்றது. இடம்பெற்றுவரும் போராட்டங்களுக்கு தங்கள் பிரதிபலிப்பை துரிதமாகவே வெளிப்படுத்தியிருக்கும் மாநில அரசாங்கங்கள் குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எதிரான நிலைப்பாடொன்றை எடுக்கின்றன.
மாநிலங்களில் அதிகாரப்பிடியை பாரதிய ஜனதா கட்சி இழந்துகொண்டுவரும் பின்புலத்திலேயே இந்த சமஷ்டி உணர்வு மீள் எழுச்சியும் இடம்பெறுகிறது. வாக்காளர்கள் மாநில தேர்தல்களுக்கும் தேசிய தேர்தல்களுக்கும் வேறுபட்ட தூண்டுவிசைகளுடன் தங்கள் பிரதிபலிப்புக்களை வெளிக்காட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.இறுதியாக நடைபெற்ற மூன்று மாநிலங்களின் சட்டசபைகளுக்கான தேர்தல்களின் ( ஜார்க்காண்ட், ஹரியானா, மகாராஷ்டிரா ) போக்குகள் மாநில தேர்தல்கள் பெருமளவுக்கு ” உள்ளூர்மய”ப்பட்டுவிட்டதையும் அவற்றில் போட்டியிடுதல் மாநிலத்திற்கு உரித்தான பிரச்சினைகளினாலேயே நிர்ணயிக்கப்படுவதையும் புலப்படுத்துகின்றன போலத் தோன்றுகிறது.
முன்னைய தேர்தல்களைப் போலன்றி இப்போது மாநிலத்தேர்தல்களில் வாக்காளர்கள் வெளிக்காட்டுகின்ற விருப்பத்தெரிவுகள் அவர்கள் தேசிய அரசாங்கத்தை தெரிவுசெய்வதற்கு வாக்களிக்கும்போது பெருமளவுக்கு மாறிவிடுகின்றன.2018 டிசம்பரில் இராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சதிஷ்கார் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பின்னடைவைக்கண்ட பாரதிய ஜனதா நான்கு மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பெற்ற பெருவெற்றி இதற்கு பிரகாசமான உதாரணமாகும்.நான்கு தசாப்தங்களில் முதற்டவையாக தேசிய அரசியலும் மாநில அரசியலும் மிகவும் வேறுபட்டவையாக தோன்ற ஆரம்பித்திருக்கின்றன. இந்த தோற்றப்பாட்டை சமஷ்டிவாதம் ஆழமாவதன் ஒரு அறிகுறி என்று ஒரு வகையில் அர்த்தப்படுத்தலாம்.
மாநிலத் தேர்தல்கள் இப்பொழுது உள்ளக அடையாள உரிமைக்கோரிக்கைகளை (Localised Identity Claims) முன்நிலைப்படுத்துவதற்கான பிரதான களங்களாக வெளிக்கிளம்பியிருக்கின்றன. பாரதிய ஜனதாவின் கடும் முனைப்பாக மத்தியமயப்படுத்தப்பட்ட கட்சிக்கட்டமைப்பு மற்றும் இந்தியா பற்றிய அதன் பெரும்பான்மைவாதச் சிந்தனை ஆகியவற்றினால் இந்த உரிமைக் கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பது மிகவும் சிக்கலானதாக இருந்துவருகிறது. – தேசிய இணைப்பு மொழியாக இந்தியைக் கொண்டுவரும் யோசனையை அமித்ஷா சில மாதங்களுக்கு முன்னர் முன்வைத்து நியாயப்படுத்தியது இந்த இடத்தில் நினைவுபடுத்தப்பட வேண்டியதாகும். மாநில அரசாங்கங்கள் அவற்றின் சமஷ்டி உரிமைகளை மீளவும் முன்நிலைப்படுத்துவதற்கும், பாரதிய ஜனதாவை துணிச்சலுடன் எதிர்ப்பதற்கும் இந்தத் தேர்தல் நகர்வுகiளே ஊக்குவிப்பை வழங்கியிருக்கின்றன.
ஆனால் இந்த மீளெழுச்சி அறிகுறிகளை எச்சரிக்கையுடனான நம்பிக்கையுடனேயே நோக்கவேண்டும். எதிர்ப்பு இயக்கங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் பாரதிய ஜனதா அதன் தத்துவார்த்த நிலைப்பாட்டை கெட்டியாக்கி நிதித்துறை மற்றும் நிர்வாகத்துறைகளில் அதன் மத்திய மயப்படுத்தும் சுபாவத்தை ஆழமாக்கி, மாநிலங்கள் ஆற்றலுடனும், விவேகத்துடனும் செயற்படுவதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்யும். ஆரவாரமான பேச்சுக்களையும், அறிக்கைகளையும் விடுத்து இந்தியாவின் மதச்சார்பின்மைக்கும், ப்னமுக சமூகக் கட்டமைப்பிற்கும் ஆதரவு வழங்குவதாகக் காட்சிக்கொள்வதை விடவும் கூடுதலான செயற்பாடுகள் பாரதிய ஜனதாவின் மத்தியமய மற்றும் பெரும்பான்மைவாதப் போக்கை எதிர்ப்பதற்கு அவசியமாகின்றன. பெரும்பான்மைவாத அடையாளத்தை வலுப்படுத்துவதற்கான பாரதிய ஜனதாவின் முயற்சிகளுக்கு எதிராக மாநிலங்கள் கோட்பாட்டு அடிப்படையிலான நிலைப்பாடொன்றை எடுக்க வேண்டியிருக்கும். அத்துடன் வாக்கு வங்கிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற ஆபத்து இருந்தாலும்கூட அதனைப் பொருட்படுத்தாமல் சமஷ்டிவாதம், மதச்சார்பின்மை என்பவற்றை ஆதாரமாகக் கொண்ட நம்பகத்தன்மையான மாற்றுக்கோட்பாடு ஒன்றை மாநிலங்கள் முன்வைக்க வேண்டும். இந்தப் பணியைச் செய்வதற்கு மாநிலங்கள் தயாரா?
(ஹிந்துஸ்தான் டைம்ஸ்)
(யாமினி ஐயர், டில்லியில் கொள்கை ஆய்விற்கான நிலையத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமாவார்.)