புதுடெல்லி முதல் லண்டன் வரை நடந்த பயங்கரவாத சதிகளில் குவாசிம் சுலைமானி பங்கு இருந்தது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் புரட்சி பாதுகாப்பு படையின் குருதுஸ் பிரிவு தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதையடுத்து அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நேற்று பேட்டி அளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-
பயங்கரவாதத்தின் ஆட்சி முடிந்துவிட்டது. குவாசிம் சுலைமானிக்கு புதுடெல்லி மற்றும் லண்டன் வரை நடந்த பயங்கரவாத சதிகளில் பங்கு இருந்தது.
ஈராக்கில் அமெரிக்க இலக்குகள் மீதான சமீபத்திய தாக்குதல்கள், ஒரு அமெரிக்கரை கொன்ற ராக்கெட் தாக்குதல்கள் மற்றும் நான்கு அமெரிக்க படை வீரர்களை மிகவும் மோசமாகக் காயப்படுத்தியது, அத்துடன் பாக்தாத்தில் உள்ள எங்கள் தூதரகம் மீது வன்முறைத் தாக்குதல் ஆகியவை சுலைமானி மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டன. அவருடைய பயங்கரவாத ஆட்சி முடிந்துவிட்டது என்பதை அறிந்து ஆறுதலடைகிறோம்.
கடந்த 20 ஆண்டுகளாக மத்திய கிழக்கை சீர்குலைக்கும் வகையில் சுலைமானி பயங்கரவாத செயல்களை நடத்தி வந்தார்.
அமெரிக்கா நேற்று செய்ததை நீண்ட காலத்திற்கு முன்பே செய்யப்பட்டிருக்க வேண்டும். நிறைய உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். சமீபத்தில் ஈரானில் எதிர்ப்பாளர்களை மிருகத்தனமாக அடக்குவதற்கு சுலைமானி தலைமை தாங்கினார், அங்கு 1,000 க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் தங்கள் அரசாங்கத்தால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.
ஈரானுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சுலைமானி கொல்லப்பட்டது போருக்கு வழிவகுக்காது.
ஈரானிய மக்கள் மீது எனக்கு ஆழ்ந்த மரியாதை உண்டு. அவர்கள் நம்பமுடியாத பாரம்பரியமும் வரம்பற்ற ஆற்றலும் கொண்ட குறிப்பிடத்தக்க மக்கள். நாங்கள் ஆட்சி மாற்றத்தை நாடவில்லை. ஒரு போரை நிறுத்த நடவடிக்கை எடுத்தோம். போரைத் தொடங்க நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
எவ்வாறாயினும், பிராந்தியத்தில் ஈரானிய ஆட்சியின் ஆக்கிரமிப்பு, அதன் அண்டை நாடுகளை சீர்குலைக்க ப்ராக்ஸி போராளிகளைப் பயன்படுத்துவது உட்பட, முடிவுக்கு வர வேண்டும், அதுவும் இப்போது முடிவடைய வேண்டும் என கூறினார்.