கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் (IGP) பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ ஆகியோருக்கு எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இருவரும் இன்று (06) கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களுக்கு இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதன் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு அமைய குறித்த இருவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் உரிய முன்னெச்சரிக்கை கிடைக்கப்பெற்றபோதிலும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சட்ட மாஅதிபரினால், பதில் பொலிஸ் மாஅதிபருக்கு வழங்கப்பட்ட உத்தரவுக்கமைய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ, கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, நாரஹென்பிட்டியிலுள்ள பொலிஸ் வைத்தியசாலையிலும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் (CID) ஜூலை 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து கடந்த ஜூலை 09 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அதன் பின்னர், குறித்த இருவருக்கும் பிணை வழங்கியமை சட்டவிரோதமானது மற்றும் நியாயமற்றது எனவும் அதனை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி கடந்த ஜூலை 18 ஆம் திகதி சட்ட மா அதிபரினால், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டது.
பின்னர் குறித்த இருவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த ஒக்டோபர் 09 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அன்றிலிருந்து அவர்களது விளக்கறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.