விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து ஐந்து மாதங்களுக்குப் பின்னர், ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ், இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
2009 ஒக்டோபர் 26ஆம் திகதி கொழும்பு வந்திருந்த போது, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம ஆகியோரை சந்தித்து, இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தார் சேர்ஜி லாவ்ரோவ்.
அப்போது, ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக் ஷ இப்போது பிரதமராக இருக்கின்ற நிலையிலும், ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சராக இன்னமும் இருக்கின்ற சேர்ஜி லாவ்ரோவ், எதிர்வரும் 14ஆம் திகதி இலங்கைக்கு மீண்டும் வரப்போகிறார்.
ஒரே ஒருநாள் பயணமாக இருந்தாலும், அவரது இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே கருதப்படுகிறது.
2009ஆம் ஆண்டு போரின் முடிவுக்குப் பின்னராக காணப்பட்ட சூழலுக்கும், 2019 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான சூழலுக்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசங்கள் இல்லாத ஒரு சூழல் காணப்படுகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசாங்கம் வெற்றி பெறுவதற்கு ஆயுத தளபாடங்களை வழங்கி ஒத்துழைத்த பல நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று.
ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட மிக் போர் விமானங்கள், எம்.ஐ-–17, எம்.ஐ—–24 ஹெலிகொப்டர்கள், பிரிஆர் துருப்புக்காவிகள், கவச வாகனங்கள், டேங்கிகள் என்பன போரில் முக்கியமான பங்கை ஆற்றியிருந்தன.
எனவே, போர் முடிவுக்கு வந்த பின்னரும், ரஷ்யாவுக்கும் ராஜபக் ஷ அரசாங்கத்துக்கும் இடையில் மிக நெருங்கிய உறவுகள் காணப்பட்டிருந்தன.
மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருந்தபோது மாத்திரமன்றி, அவர் பதவியிழந்த பின்னரும் ரஷ்யாவுக்குப் பல பயணங்களை மேற்கொண்டிருந்தார்.
ஆனால், 2015 இல் மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சீனாவைப் போலவே, ரஷ்யாவிடம் இருந்து விலகியே நின்றது. அதற்குக் காரணம் அமெரிக்கா தான்.
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் பரவுவதை மாத்திரம் அமெரிக்கா எதிர்க்கவில்லை. ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகரிப்பது குறித்த அச்சமும் அமெரிக்காவுக்கு இருக்கிறது.
அதனால் தான் ரஷ்யாவின் பாரம்பரிய நண்பனாக இருந்து வந்த இந்தியாவுடன், நெருக்கத்தை ஏற்படுத்தியது அமெரிக்கா.
ரஷ்யாவிடமிருந்து எஸ்-–400 ஏவுகணைகளை இந்தியா வாங்கிய போது அதற்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால் இந்தியா அதனையும் மீறி வாங்கிய போது, அமெரிக்கா எதுவும் செய்யவில்லை.
ஏனென்றால், ரஷ்யாவுடனான போட்டியை விட, இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவுக்கு நண்பர்கள் தேவைப்படுகிறார்கள். சீனா, ரஷ்யா போன்ற சக்திகளிடம் அவர்கள் சிக்கி விடக்கூடாது என்று எதிர்பார்க்கிறது அமெரிக்கா.
இலங்கையுடன், ரஷ்யா பாதுகாப்பு ரீதியான உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. குறிப்பாக ரஷ்யாவிடமிருந்து ஆயுத தளபாடங்களை வாங்குவதை அமெரிக்கா எதிர்த்தது.
ரஷ்யாவின் Rosborono export நிறுவனத்திடம் இருந்து போர்த்தளபாடங்கள் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா எச்சரிக்கை செய்தது. இதனை கடந்த ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாகவே கூறியிருந்தார். அமெரிக்காவினால் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்ட ரஷ்ய நிறுவனத்திடம் ஆயுதங்களை வாங்கக் கூடாது என்று அமெரிக்கா அழுத்தங்களைக் கொடுத்ததால் அப்போதைய அரசாங்கம் விலகியிருக்க வேண்டியிருந்தது.
இதனால் ரஷ்யாவிடம் இருந்து ஜிபார்ட்– -5 ரக போர்க்கப்பல் மற்றும் எம்.ஐ.17 ஹெலிகொப்டர்கள், பிரிஆர் துருப்புக்காவி கவசவாகனங்கள், ஏ-கே.47 ரக துப்பாக்கிகள் போன்றவற்றின் கொள்வனவு நடவடிக்கைகளை மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் கைவிட நேரிட்டது.
மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் ரஷ்யா வழங்கியிருந்த கடன் திட்டம் காலாவதியாகியிருந்த நிலையிலும், மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துக்கு அதனை நீடித்து, 300 மில்லியன் டொலர் கடன் திட்டத்தில், ஜிபார்ட் – -5 போர்க்கப்பலை வழங்க ரஷ்யா இணங்கியிருந்தது.
ஆனால், அமெரிக்காவின் எதிர்ப்பினால், ரஷ்ய நிறுவனத்துடன், ஆயுத தளபாடக் கொள்வனவு உடன்பாடுகளில் கையெழுத்திட முடியாத நிலை முன்னைய அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருந்தது. ஏனென்றால், ரஷ்யாவை விட அமெரிக்காவின் தேவை கொழும்புக்கு அதிகமாக இருந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்யாவின் பக்கம் சாயும் எண்ணத்தில் இருந்தாலும், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை மீறி அவரால் – வரையறுக்கப்பட்ட அளவிலேயே செயற்பட முடிந்தது.
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அமெரிக்க சார்புடையதாக இருந்தமை மாத்திரம் அதற்குக் காரணமல்ல.
சர்வதேச அரங்கில் இலங்கை அரசாங்கம் அழுத்தங்களில் இருந்து தப்பிக் கொள்வதற்கும், அமெரிக்காவின் தயவு தேவைப்பட்டது. குறிப்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்காவை உள்ளடக்கிய மேற்குலகத்தின் அழுத்தங்களில் இருந்து தப்பிக்க வேண்டி யிருந்தது.
அதனால், அமெரிக்காவை பகைத்துக் கொண்டு ரஷ்யா பக்கம் சாய முடியாத நிலையில் மைத்திரிபால சிறிசேன இருந்தார்.
எனினும் அவர் தனது பதவிக்காலத்தின் இறுதிக்கட்டத்தில், குறிப்பாக, 2018 நடுப்பகுதிக்குப் பின்னர், ரஷ்யாவுடனான நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தினார்.
ரஷ்யாவுக்கான தூதுவராக கலாநிதி தயான் ஜயதிலக நியமிக்கப்பட்டது அதில் முக்கியமான ஒரு அம்சமாகும். அதற்குப் பின்னர், ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாதுகாப்பு உறவைப் பலப்படுத்திக் கொள்வதற்கான அடுக்கடுக்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
கடந்த ஆண்டு பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக இருந்த அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, தற்போதைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா ஆகியோர் தனித்தனியாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ரஷ்யாவுக்குப் பயணங்களை மேற்கொண்டிருந்தனர்.
இந்தப் பயணங்களின் போது மூன்று விடயங்களில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. முதலாவது ரஷ்ய பாதுகாப்பு தளபாடங்களை இலங்கை படைகளுக்கு கொள்வனவு செய்வது. பொருத்தமான ஆயுத தளபாடங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
இரண்டாவது, இலங்கைப் படையினருக்கு ரஷ்யாவில் பயிற்சிகளை அளிப்பது. குறிப்பாக ஆட்டிலறி சூட்டுப் பயிற்சிகள் மற்றும் தீவிரவாத முறியடிப்புப் பயிற்சிகளை அளிப்பது, ரஷ்யாவில் இலங்கைப் படையி்னருக்கான பயிற்சி இடங்களை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
மூன்றாவதாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது. இதற்கமைய, ரஷ்யாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றும் கூட கைச்சாத்திடப்பட்டது.
ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கு 2019ஆம் ஆண்டில் வேகமான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, இலங்கைக்கு (அம்பாந்தோட்டை துறைமுகம்) வந்த முதலாவது வெளிநாட்டுப் போர்க்கப்பல் கூட, ரஷ்யாவினுடையதாகத் தான் இருந்தது.
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் மொஸ்கோவில் தூதுவராக உள்ள கலாநிதி தயான் ஜயதிலகவின் பங்கு முக்கியமானது.
மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காக பாடுபட்டவர் தயான் ஜயதிலக,. பின்னர் அவர் மஹிந்த ராஜபக் ஷவின் பக்கம் போய், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காகப் பாடுபட்டார்.
அவ்வாறான ஒருவருக்குத் தான் மைத்திரிபால சிறிசேன கடுமையான போராட்டத்துக்கு மத்தியில், ரஷ்யாவுக்கான தூதுவர் நியமனத்தை பெற்றுக் கொடுத்திருந்தார்.
இப்போது ராஜபக் ஷ அரசாங்கம் மீண்டும் பதவிக்கு வந்துள்ள நிலையில், ரஷ்யாவும் இலங்கையின் மீதான ஈர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. ரஷ்ய வெளிவிவகார அமைச்சர். சேர்ஜி லாவ்ரோவ், இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள பயணமும் அதன் ஒரு வெளிப்பாடு தான் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ வரும் 14ஆம் திகதி சீனாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ் அன்றைய தினமே கொழும்பு வரவுள்ளார்.
இந்த இரண்டு பயணங்களுமே அமெரிக்காவுக்கு சவாலானவை. இலங்கையில் மாத்திரமன்றி இலங்கைக்கு வெளியிலும் இது மேற்குலகத்துக்குச் சவாலானது தான்.இலங்கையில் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஆதிக்கம் செலுத்துவதை மாத்திரம் மேற்குலகம் எதிர்க்கவில்லை.
இலங்கைக்கு வெளியில், குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும், இந்த இரண்டு நாடுகளும் இணைந்து இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டு வந்தவை.
வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் குறித்த விவாதம் நடக்கப்போகின்ற நிலையில், ரஷ்யா, சீனாவுடன் இணைந்து கொழும்பு வகுக்கப் போகின்ற வியூகம் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்துக்கு மிகமிக சவாலாகவே இருக்கும்.
அந்தச் சவாலை அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன ?
– ஹரிகரன்