கர்த்தர் தந்த தீபம்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி.
நீதிமொழி 6:23.
தேவன் தாம்படைத்த மக்களுக்கு அருளிய நல்வாழ்வுக்கான வேதம் ஓர் ஒப்பற்ற ஈவாகும். அந்தகாரமும் இருளம் நிறைந்த இவ்வுலகத்திலே மனிதன் தனக்கு நலமாகத்தோன்றும் வழிகளைத் தெரிந்தெடுத்து கடவுளையடைய அவைகளில் சென்று பிரயாசப்படுகிறான்.ஆகவேதான் வேதாகமம் மிகத்தெளிவாக கூறுகிறது, மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு, அதின் முடிவோ மரண வழிகள்என்று நீதிமொழி 14:12.
உலகத்தில் தோன்றி மறைந்த மதங்களும் மார்க்கங்களும், சன்மார்க்க நெறிகளும் மனிதனை உலகத்தின் அந்தகாரத்தின் பிடியில் இருந்து விடுவிக்கவில்லை. தேவனின் தீபமாகிய வேதாகமம் ஒன்றே மக்களை விடுவித்து, நித்தியத்திற்கான வழியைக் காட்டுகிறது. இதனை சங்கீதம் 119:105. இவ்வாறு கூறுகிறது. உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. வேதத்தை கரங்களில் வைத்திருக்கும் அவரின் பிள்ளைகள் பாதைமாறவோ, இடறவோ வேண்டியதில்லை. காரணம் தேவனின் வேதம் நமக்கு வெளிச்சத்தையும், பாதையையும் காட்டுகிறது.
இந்த வேதத்தையும், அதன் வார்த்தைகளையும் ஒளிக்கும், தீபத்திற்கும், விளக்கிற்கும், வெளிச்சத்திற்கும் ஒப்பிட்டு வேதாகமத்தில் பல இடங்களில் சொல்லப் பட்டிருப்பதை நாம் காண்கூடியதாகவும், வாசித்து அறியக்கூடியதாகவும் உள்ளது. இயேசு விளக்காக இருக்கிறார் வெளிப்படுத்தல் 21:23. நகரத்திற்கு வெளிச்சங் கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை. தேவனுடையமகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு. தேவன் அருளும் வார்த்தை தீபமாகவும் விளக்காகவும் இருக்கிறது சங்கீதம் 119:105. உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
அவரே மெய்யான ஒளியாயிருக்கிறார் 1யோவான்2:7-8. சகோதரரே, நான் உங்களுக்குப் புதிய கற்பனையை அல்ல, ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கற்பனையையே எழுதுகிறேன். அந்தப் பழைய கற்பனை நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிற வசனந்தானே. மேலும், நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது. ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.
அவருடைய வசனமும் வார்த்தையும் அவரை பின்பற்றி நடக்கிறவர்களுக்கு ஒளியாயிருக்கிறது 2 பேதுரு 1:19. அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு. பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும். இன்னும் பல உதாரணங்கள் மூலம் இவைகளை எடுத்துக்காட்டலாம்.
கர்த்தருடைய வேதமாகிய தீபம் மானிடவாழ்க்கையில் செயற்படும் வழிகளில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்.
1. வேதவசனமாகிய தீபம் இருளை அகற்றுகிறது.
மானிட வாழ்வில் விளக்கானது அத்தியவசியமானதாகும். பழைய காலங்களில் மனிதர் இரவுநேரங்களில் தீபங்களையும் விளக்குகளையும் உபயோகித்து வந்தனர். இன்று மின்சாரத்தின் மூலம் மக்கள் ஒளியைப் பெறுகின்றனர். இவ்வாறு மக்களுடைய அன்றாட வாழ்வில் தீபம் ஒன்றித்து இருப்பதை நாம் காணக்கூடியதாகவுள்ளது.
அதேபோன்றுதான் ஆண்மீக வாழ்வலும் தீபம் அத்தியவசியமானதாகும். மக்களுடைய வாழ்க்கையில் பாவமும் சாபமும் அறியாமை என்கிற இருளும் நிறைந்ததாகவுள்ளது. நாம் தேவனை அறிந்து அவரின் பிள்ளைகளாக மாறும்போது அந்தகார இருளில் இருந்து ஆச்சரியமான ஒளியிடத்திற்கு நம்மை அழைத்து வருகிறார்.
நம் வாழ்வில் விடுதலை வேண்டுமாகில் நம் வாழ்வு பிரகாசிக்க வேண்டுமாகில் வேதவசனமாகிய விளக்கு ஏற்றப்பட்டு அதன் வெளிச்சம் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் எழுந்து ஜொலிக்க வேண்டும். இந்த உண்மையை அறிந்த தாவீது இவ்வாறு கூறுகிறான் சங்.18:28. தேவாPர் என் விளக்கை ஏற்றுவீர். என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.
2. வேதவசனம் நம்மை வழிநடத்தும் தீபமாயிருக்கிறது.
வேதவசனம் நம்வாழ்வின் இருளைப்போக்குகிறது மட்டுமல்லாமல் அன்றாட வாழ்வில் நடக்கவேண்டிய வழியையும் காட்டுகிறது. இந்த உலகத்தில் வாழும் எமக்கு முன்பாக பலவழிகள் உண்டு. தேவன் வெறுக்கிறதான பொய் வழிகள், பாவிகளின் வழிகள், கோணலான வழிகள், மாறுபாடான வழிகள், இருளின் வழிகள் என பல இருப்பதை நாம் காணலாம். அதேவேளையில் நீதியின் வழி பரிசுத்தத்தின் வழி, தேவனுடைய வழி, சத்தியத்தின் வழி, நித்தியத்தின் வழி என இருப்பதையும் நாம் காணலாம்.
நாம் எந்த வழியில் செல்லவேண்டும்? எவ்வாறு நாம் செல்லவேண்டிய வழியை தெரிந்தெடுத்து, பொல்லாத வழிக்கும் தீங்கான வழிக்கும் விலகி நடப்பது? அதற்காகத்தான் தேவன் இந்த வேதவசனமாகிய பாதைக்கு தீபத்தை எமக்கு தந்துள்ளார். நாம் தீபத்தை கையிலேந்தும்போது அவர் நாம் செல்ல வேண்டிய வழியை நமக்கு காட்டுவார். இதனை நாம் ஏசாயா 30:21இல் காணலாம். நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.
3. வேதவசனமாகிய தீபம் நம்மை மகிமையில் சேர்க்கிறது.
நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். 2கொரிந்தியர் 3:18. இந்த வசனத்தை மிகவும் நன்றாக விளங்கிக் கொள்ள நாம் கண்களால்காணும் ஓர் காட்சியை கூறவிரும்புகிறேன்.
வண்ணாத்திப்பூச்சியின் வாழ்க்கையை நாம் சற்றுகவனித்தால், அதற்கு முட்டைப்பருவம், இலைகளைச் சாப்பிடும் சிறுபுழுவின் பருவம், கூட்டுப்புழுவாய்த் தொங்கும் பருவம், இறுதியாக சிறகடித்து அழகான வண்ணாத்துப் பூச்சியாக பறந்து செல்லும் பருவம். அப்போது புழுவைப்போல இலையை சாப்பிடாது. மாறாக ருசியான தேனை உறிஞ்சி சாப்பிடும்.
இதேபோன்றுதான் நாமும் தேவனுடைய வார்த்தையில் நிலைத் திருந்தால் எமது வாழ்க்கையும் மறுரூபமாக்பட்டு தேவனுக்குள் மகிமையடைவோம். இந்த நல்ல எண்ணத்தோNடு தேவனிடம் மன்றாடுவோம்.
அன்பின் தேவனே, இன்று உம்முடைய வார்த்தையாகிய தீபத்தில் இருக்கும் நன்மைகளை அறிய உதவியதற்காக நன்றி. உம்முடைய வார்த்தையை நான் நேசித்து நடக்க உதவியருளும். நான் அதை வாசித்து தியானித்து காத்து நடக்க உதவி செய்து என்னை இருளின் பிடியில் இருந்து வெளிச்சத்தின் பிள்ளையாக நான் வாழ காத்துக்கொள்ளும்படியாக இயேசுவின் நாமத்தினால் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
Bro. Francis Anthonypillai. Rehoboth Ministries – praying for Denmark