தனுஷ் நடித்துள்ள படமான ‘பட்டாஸ்’ 1,500 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளதாக பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘பட்டாஸ்.’ இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சினேகா, மெஹ்ரின் ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். துரை செந்தில்குமார் டைரக்டு செய்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து இருக்கிறது. படம், பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது. படத்தை பற்றி தயாரிப்பாளர் ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ டி.ஜி.தியாகராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“இந்த படம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த அடி முறை கலையை கருவாக கொண்டது. இது, அந்த காலத்தில் தமிழர்களின் தற்காப்பு கலையாக இருந்தது. இப்போதும் தென் மாவட்டங்களில் பழக்கத்தில் இருக்கிறது. கதைப்படி, ‘பட்டாஸ்’ கதையின் நாயகன் தனுஷ், அடி முறை கலைகளில் தேர்ந்தவராக இருக்கிறார். இதற்காக தனுஷ் 6 மாதங்கள் பயிற்சி பெற்றார். படத்தில் அவருக்கு மனைவியாக வரும் சினேகாவும் இந்த கலையை கற்றுக் கொண்டார்.
தனுஷ் அப்பாவாகவும், மகனாகவும் 2 வேடங்களில் நடித்து இருக்கிறார். படம், பொங்கல் விருந்தாக 1,500 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. எங்கள் பட நிறுவனம் எப்போதுமே குடும்பப்பாங்கான படங்களையே தயாரித்து வருகிறது. ஆபாச காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனமோ இருக்காது. ‘பட்டாஸ்’ படமும் அப்படியே அமைந்து இருக்கிறது.
அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில், தணிக்கை குழுவினர், ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.
தமிழ் பட உலகில் இருந்து வரும் மிகப்பெரிய பிரச்சினை, திருட்டு வி.சி.டி. மற்றும் இணையதளங்களில் படங்கள் வருவதுதான். இதை செய்து வரும் தமிழ் ராக்கர்ஸ், நார்வேயில் இருந்து செயல்படுகிறது. பிரச்சினை எழும்போதெல்லாம் தமிழ் ராக்கர்ஸ் தங்களின் இருப்பிடத்தை மாற்றிக் கொள்கிறார்கள். அரசாங்கம் மனது வைத்தால், இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முடியும்.
ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படம், ‘வாட்ஸ் அப்’பில் வந்ததற்கு சத்யஜோதி பிலிம்ஸ் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.”
இவ்வாறு டி.ஜி.தியாகராஜன் கூறினார்.