நிர்பயா வழக்கில் தூக்குதண்டனை பெற்ற 2 குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டது.
டெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி ‘நிர்பயா’, கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி நள்ளிரவு, ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கடுமையாக தாக்கப்பட்டு, பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டார்
சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், அதே மாதம் 29-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
ஆனால், ராம்சிங் என்பவன் திகார் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டான். மற்றொருவன் சிறுவன் என்பதால், 3 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டான்.
முகேஷ் (வயது 32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடக்கோரி, டெல்லி கோர்ட்டில் ‘நிர்பயா’வின் பெற்றோரும், டெல்லி மாநில அரசும் வழக்கு தொடர்ந்தனர்.
அதை ஏற்று, வருகிற 22-ந் தேதி காலை 7 மணிக்கு 4 பேருக்கும் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், குற்றவாளிகளில் வினய் சர்மா (வயது 26), முகேஷ் குமார் (32) ஆகிய இருவரும் தங்கள் தண்டனையை ரத்து செய்யக்கேட்டு நிவாரண மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீது இன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்றது. 2 குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர்களின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் வரும் 22-ம் தேதி குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதியானது.