ஐரோப்பிய ஒன்றியத்தினால் விடுதலைப் புலிகள் அமைப்பு மீது விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியல் (EU terrorist list) தொடர்பில் தனது பயங்கரவாத உறுப்பினர்கள் மற்றும் அமைப்புகளின் பட்டியலை நேற்று (13) புதுப்பித்துள்ளது.
அதற்கமைய 15 தனிநபர்கள் மற்றும் 21 அமைப்புகளை தொடர்ந்தும் தனது பயங்கரவாத தடைப் பட்டியலில் உள்ளடக்குவதாக அறிவித்துள்ளது.
இவ்வாறு, ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் நிதி மற்றும் சொத்துக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் தடை செய்யப்படுவதோடு, அவை முடக்கப்படும் என்பது குறிப்பிடத்த்ககது.
பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான ஐரோப்பிய ஒன்றிய நடவடிக்கைகளுக்கு ஏற்ப அவ்வமைப்பு இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் எல்.ரி.ரி.ஈயை தொடர்ந்தும் தடைசெய்யும் பட்டியலில் உள்ளடக்கியிருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் தடைசெய்யப்பட்ட 21 அமைப்புக்களில் ஒன்றாக எல்.ரி.ரி.ஈ அமைப்பு காணப்படுகிறது. 2006ஆம் ஆண்டு இந்த அமைப்பு முதன் முதலில் தடைசெய்யப்பட்டதுடன், அன்று முதல் இதுவரை இந்த அமைப்பு தொடர்ச்சியாக தடைசெய்யப்பட்டு வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய சபை 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதியன்று பயங்கரவாதத்தை தடை செய்வதற்கான சட்ட வரைபொன்றை உருவாக்கியது. இதற்கமைய பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட சொத்துக்கள், தனிநபர்கள், குழுக்கள் மற்றும் எல்லைகள் ஆகியன முடக்கப்பட்டன.
அத்துடன் பயங்கரவாத அமைப்புக்களின் பெயர்களை பட்டியலில் தொடர்ந்தும் வைத்திருப்பதா, இல்லையா? என்பது தொடர்பில் ஆராய்வதற்காக வருடத்துக்கு இரண்டு தடவைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் சபையினால் இப்பட்டியல் மீளாய்வு செய்யப்படும்.
அந்த வகையில் 2006 ஆம் ஆண்டில் ஐரோப்பிய சபை விடுதலைப் புலிகள் அமைப்பை அதன் பயங்கரவாத தடைப் பட்டியலில் சேர்த்துக்கொண்டதுடன் அன்று முதல் அதனை தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட அமைப்பாகவே கருதி வருகிறது.