பிறந்திருக்கும் தைப்பொங்கல் திருநாளை தமிழ் மக்கள் கொண்டாடி மகிழும் நம்பிக்கை பெருநாளாக வரவேற்போம் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
உழவர் திருநாள் என்றும், தமிழர் பெருநாள் என்றும் எமது மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்று காலந்தோறும் கொண்டாடி வரும் தைப்பொங்கல் திருநாள் தமிழர் பண்பாட்டு அடையாளங்களை பறைசாற்றும் ஓர் புனித நாளாகும்.
இயற்கையை வணங்கிய எமது முன்னோர்களின் வரலாற்று பாரம்பரியங்களை ஏற்று எமது மக்கள் சூரியனுக்கு நன்றிசெலுத்தும் ஓர் உன்னத தினம் இது!
தை பிறந்தால் வழி பிறக்கும், வழி பிறந்தால் வாழ்வு சிறக்கும்,..இந்த நம்பிக்கையின் ஒளிக்கீற்று எமது மக்களின் மனங்கள் தோறும் இன்று வீசத்தொடங்கியிருக்கிறது..
பழையன கழிந்து, புதியன யாவும் புகுந்து தமது வாழ்வு பூத்துக்குலுங்க வேண்டும் என்ற எமது மக்களின் கனவுகள் யாவும் நிறைவேற வேண்டும்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் படி வெல்லும் என்ற எமது மக்களின் எண்ணங்கள் ஈடேற வேண்டும்.
எந்த இலட்சிய கனவுகளுக்காக எமது மக்கள் இத்தனை பேரவலங்களை சந்தித்தார்களோ அந்த இலட்சிய கனவுகள் யாவும் இனி ஈடடேற வேண்டும்!
உங்கள் இலட்சியத்தில் தோற்றீரானால், சூட்சுமத்தை மாற்றுங்கள், இலட்சியத்தை அல்ல என்ற தர்ம உபதேசங்கள் போல்,
நோக்கரிய நோக்கே, நுணுக்கரிய நுண்ணுணர்வே என்று கூறும் ஆன்மீக சிந்தனைகள் போல், எமது மதி நுட்ப சிந்தனையின் வழி நின்று நாம் மகத்தான அரசியல் வெற்றிகளை படைப்போம்!… பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ இலட்சிய சிந்தனை வழியில், பிறந்திருக்கும் தைப்பொங்கல் திருநாள் சகல மக்களுக்கும் சமனான பொது மகிழ்வையும் புது வாழ்வையும் தரட்டும்.
இவ்வாறு தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் நீரியல் வள அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பிறந்திருக்கும் தைப்பொங்கல் திருநாளை நம்பிக்கையோடு கொண்டாடி மகிழும் மக்களின் வாழ்வில் மாற்றங்கள் நிகழ மக்களின் பங்களிப்போடு உழைப்போம் என்றும் என்றும் அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.