இந்தியாவில் பல வெடிகுண்டு சம்பவங்களை நிகழ்த்தியதில் பங்காற்றியதாக கூறப்படும் மற்றும் 1993 ராஜஸ்தான் வெடிகுண்டு சம்பவத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் டாக்டர் ஜலீஸ் அன்சாரி, இவர் Dr. Bomb என்று பலராலும் அறியப்படுகிறார்.
அவருக்கு வழங்கப்பட்ட 21 நாள் பரோல் காலம் முடியவுள்ள ஒரு நாள் முன்பு அவர் மும்பை வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் தீவிரவாத தடுப்புப்பிரிவு, குற்றப்பிரிவு மற்றும் மும்பை பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜ்தானி எக்ஸிபிரஸில் வெடிகுண்டு வைத்தது தொடர்பான குற்றச்சாட்டில் 1994 ஆம் ஆண்டு சிபிஐ – ஆல் ஜலீஸ் அன்சாரி கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் 50 க்கும் மேற்பட்ட வெடிகுண்டு சம்பங்களில் இவருக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. 1993 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் ரயில்களில் 6 இடங்களில் வெடிகுண்டு வெடிக்க செய்ததற்காக இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு ஆஜ்மீர் சிறையில் இருந்து வந்தார். தற்போது அவருக்கு வயது 69.
இந்நிலையில் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதற்காக ஜலீஸ் பரோலில் வந்துள்ளார். மும்பையில் உள்ள மொமின்புரா பகுதியில் உள்ள அவரது மனைவி மற்றும் ஏழு பிள்ளைகளோடு தங்கியிருந்தார்.
பரோல் முடியும் ஒரு நாள் முன்பு காலையில் வெளியே சென்ற ஜலீஸ், வீட்டிற்கு திரும்பவில்லை என்று அவரது மனைவி காவல்துறையில் புகார் அளிக்க, அவரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.