செல்வராகவன் இயக்கத்தில் உருவான ‘என்.ஜி.கே’ தோல்விக் குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார் நடிகர் சூர்யா
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘என்.ஜி.கே’. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படம் மே 31-ம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாகக் கலவையாக இருந்தாலும், வசூல் ரீதியில் தோல்வியைத் தழுவியது.
இந்தப் படம் தொடர்பான விமர்சனங்கள் மற்றும் கருத்துகளுக்கு சூர்யா தனது ட்விட்டர் பதிவில் “என்.ஜி.கே திரைப்படம் குறித்த அத்தனை கருத்துகளையும் தலைவணங்கி ஏற்கிறேன். மாறுபட்ட கதையம்சத்தையும் நடிகர்களின் வித்தியாசமான நடிப்பையும் நுட்பமாகக் கவனித்துப் பாராட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி #கத்துக்கறேன்தலைவரே” என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தனது அடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார் சூர்யா.
இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 13) ஹைதராபாத்தில் ‘காப்பான்’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘பந்தோபஸ்த்’ பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அச்சந்திப்புக்கு முன்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார் சூர்யா.
அதில் ‘என்.ஜி.கே’ தோல்வி குறித்த கேள்வி எழுப்பியதற்கு சூர்யா, “’என்.ஜி.கே திரைக்கதையை முடிக்க செல்வராகவன் சார் இரண்டரை வருடங்கள் எடுத்துக் கொண்டார். அக்கதையை மூன்று – நான்கு வடிவங்கள், 3 விதமான க்ளைமேக்ஸ் என வைத்திருந்தார். நாங்கள் வெளியிட்டது தான் சிறந்த வடிவம் என்று படக்குழு நம்புகிறது.
தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நான் என ஒரே மனநிலையில் தான் இருந்தோம். முழு நேர்மையுடன் ‘என்.ஜி.கே’ படத்துக்காக ஒத்துழைத்தோம். ஒரு படத்தின் தலையெழுத்து என்னைப் பாதிக்காது. ஆனால் இப்படியான படங்கள் ஓடியிருந்தால் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் சூர்யா.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’, செப்டம்பர் 20-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.