தனியார் பஸ்களில் பயணிகள் அசௌகரியத்திற்கு உள்ளாகும் வகையில் அதிக சத்தத்துடன் பாடல்கள் மற்றும் காணொளிகளை ஒலி, ஒளிபரப்புவதற்கான தடை நேற்று முன்தினம் முதல் அமுலுக்கு வந்துள்ளது.இதனை மீறி செயற்பட்டால் கடுமையான நடைவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தேவையேற்படின் பஸ்களில் பாடல் ஒலி,ஒளிபரப்பு செய்வதை முற்றாக தடைசெய்வதற்கு சட்டம் உருவாக்குவதாகவும் குறிப்பிட்டார்.
தனியார் பஸ்களில் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பப்படும் பட்சத்தில் அது குறித்து முறைப்பாடுகளை 1955என்ற தொலைபேசி மூலம் அறிவிக்க முடியும் என பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு அமைய பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சின் பணிப்பிற்கமைய பஸ்களில் பாடல் ஒலி,
ஒளிபரப்பப்படுகிறதா என ஆராய்வதற்காக அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று முன்தினம் பஸ் நிலையங்களுக்கு சென்று ஆராய்ந்தார்.
தற்பொழுது அநேகமான பஸ் உரிமையாளர்கள் அமைச்சின் கோரிக்கைக்கமைய செயற்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனை வெறும் உத்தரவாக அன்றி ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்கு வேண்டுமென்றே செய்யும் தீங்காக கருதி சுயகட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
கடுவெல பஸ் தரிப்பிடத்திற்கு சென்ற அமைச்சர் பயணிகளுடன் உரையாடியதோடு,அதிக சத்தத்துடன் பாடல் இசைப்பதை தடுத்தது தொடர்பில் அவர்கள் அரசிற்கு நன்றி தெரிவித்தார்கள்.
எரிபொருள் விலை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன.மக்கள் மீது அரசாங்கம் சுமையேற்றாது. கடந்த அரசின் விலைச்சூத்திரம் இருந்தால் தற்பொழுது எரிபொருள் விலை 10 ரூபாவினால் உயர்ந்திருக்கும்.எரிபொருள் மீதான வரிகளை குறைத்து அரசாங்கம் நஷ்டத்தை குறைத்துள்ளதாகவும் கூறினார்.