நடிகர் ரஜினிகாந்த் இலங்கை செல்வதற்கு விசா அனுமதி மறுப்பு என்று வெளியான செய்தி வதந்தியாகும் என நமல் ராஜபக்சே தெரிவித்து உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இலங்கை நாட்டிற்கு செல்ல அவருக்கு இலங்கை அரசு விசா அனுமதி மறுத்து விட்டது என சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே இது முற்றிலும் ஒரு வதந்தியாகும் என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தியாவின் மூத்த நடிகர் ரஜினிகாந்த் இலங்கை செல்வதற்கு, அவருக்கு விசா அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது என்ற செய்தியானது வதந்தி ஆகும்.
நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்த தடையுமில்லை, அது பற்றிய வதந்திகளில் எந்த உண்மையுமில்லை. இலங்கைவாசிகள் பலரை போன்று நானும், எனது தந்தையாரும் திரு. ரஜினிகாந்த் திரைப்படங்களின் பெரும் ரசிகர்கள். அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம், ஒரு தடையுமில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் பெயரிடப்படாத படம் ஒன்றில் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் சார்பில் தயாராகி வரும் இந்த படத்தில் அவருடன் நடிகைகள் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சதீஷ் மற்றும் சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். எஜமான், முத்து, வீரா உள்ளிட்ட படங்களில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்துள்ள மீனா 24 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.