விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் ரூ.200 கோடிக்கு வியாபாரமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிகில் படத்துக்கு பிறகு ‘மாஸ்டர்’ படத்தில் விஜய் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். மாளவிகா மோகனன் நாயகியாக வருகிறார். விஜய் சேதுபதி, அர்ஜுன்தாஸ், ஆண்ட்ரியா, கவுரி கிஷான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். படப்பிடிப்பு டெல்லியிலும், கர்நாடகாவில் உள்ள சிறைச்சாலையிலும் நடந்துள்ளது.
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியிலும் முக்கிய காட்சிகளை எடுத்தனர். படத்தில் விஜய்யின் தோற்றங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அவற்றை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். மாஸ்டர் படம் ‘சைலன்ஸ்டு’ என்ற கொரியன் படத்தின் சாயலில் தயாராவதாக இணையதளங்களில் தகவல் பரவியது.
மாஸ்டர் மற்றும் சைலன்ஸ்டு போஸ்டர்களையும் இணைத்து வெளியிட்டனர். இரண்டும் வெவ்வேறு கதை என்று படக்குழு மறுத்துள்ளது. மாஸ்டர் படத்துக்கு வினியோகஸ்தர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே மாஸ்டர் வியாபாரம் நடந்து முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.
தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளின் வினியோக உரிமைகள், தொலைக்காட்சி, டிஜிட்டல் உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.200 கோடிக்கு மாஸ்டர் படம் வியாபாரம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது விஜய் பட வரலாற்றில் சாதனையாக கருதப்படுகிறது. வருகிற ஏப்ரல் மாதம் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.