சீனாவில் கடந்த இரண்டு நாட்களுக்குள் மர்ம வைரஸ் தொற்றிய 139 சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு அந்த வைரஸ் வுஹானில் இருந்து சீனாவின் ஏனைய பிரதான நகரங்களுக்கு பரவியுள்ளது.
தலைநகர் பீஜிங்கில் இரண்டு சம்பவங்களும், தெற்கில் தொழில்நுட்ப மையமாக உள்ள சென்சானில் ஒரு சம்பவமும் பதிவாகியுள்ளது.
இதன்படி இந்த வைரஸ் தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 200 ஆக அதிகரித்திருப்பதோடு இதனால் ஏற்படும் சுவாச நோயினால் மூவர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் சந்திர வருட விடுமுறையை ஒட்டி நாட்டில் மில்லியன் கணக்கானவர்கள் இடம்பெயர தயாராகி வரும் நிலையிலேயே இந்த வைரஸ் தீவிரம் அடைந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் வுஹான் நகரில் முதல் முறை கண்டுபிடிக்கப்பட்ட இந்த மர்ம வைரஸ் கொரோனா வைரஸில் இருந்து விகாரம் பெற்றது என்று சுகாதார துறையைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வைரஸ் நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்துகிறது என்று அவர்கள் கூறியபோதும் அது பற்றிய புரிதல் இன்னும் மர்மமாகவே உள்ளது.
இறைச்சி சந்தை ஒன்றில் இருந்து இந்த வைரஸ் ஏற்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இது எவ்வாறு பரவுகிறது என்பது பற்றிய விபரத்தை அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
தென் கொரியாவில் இந்த வைரஸ் தொற்றிய சம்பவம் ஒன்று பற்றி நேற்று கொரியாவின் நோய்த் தடுப்பு கட்டுப்பாட்டு நிலையம் உறுதி செய்துள்ளது. சீனாவின் வுஹான் நகரிலிருந்து சோல் சென்ற 35 வயதுப் பெண்ணிடம் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
ஏற்கனவே தாய்லாந்து மற்றும் ஜப்பானிலும் இந்த வைரஸ் தொற்றிய சம்பவங்கள் பதிவாயின.
இந்த வைரஸானது மற்றொரு கொரோனா வைரஸான சார்ஸ் வைரஸுடன் ஒப்பிடப்படுகிறது. 2000களின் ஆரம்பத்தில் எற்பட்ட சார்ஸ் வைரஸினால் 774 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
மனிதனைத் தொற்றும் வேறு எந்த கொரோனா வைரஸை விடவும் இந்த புதிய வைரஸின் மரபணு குறியீடுகள் சார்ஸ் வைரஸுடன் ஒத்திருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கொரோனா வைரஸ்கள் என்பது பெரிய வைரஸ் குடும்பம். இதில் மனிதர்களை பாதிக்கக்கூடியவையாக ஆறு வகை வைரஸ் இருந்தன, தற்போது இந்த மர்ம வைரஸ் ஏழாவது வகையாக இருக்கக்கூடும்.
சீனா மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவை இந்த தொற்று, கொரோனா வைரஸ் என முடிவுக்கு வந்துள்ளன.
காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சினை ஆகியன இந்த நோயின் அறிகுறிகளாக உள்ளது. இது பல சுவாச நோய்களுக்கான அறிகுறிகளை ஒத்துள்ளது.
இந்த வைரஸ் தொடர்ந்து தடுக்கக் கூடியதாகவும் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருப்பதாக சீன தேசிய சுகாதார ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. நோய் பராமரிப்பு மற்றும் சிகிச்சை முறை பற்றி இன்னும் தெரியாத நிலையில் தீவிரமாக அவதானிக்கப்பட்டு வருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
பிராந்தியத்தில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் அமெரிக்காவின் மூன்று விமான நிலையங்களில் சுகாதார கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு தீவிரமாக சோதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இந்த வைரஸ் பரவியது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும் அதற்கான சாத்தியத்தை அதிகாரிகள் மறுக்கவில்லை.