உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவில் பூஜித் ஜயசுந்தர

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர், இன்று (25) காலை 10 மணியளவில் சிறைச்சாலையிலிருந்து சிறைச்சாலை வேன் மூலம் BMICH இலுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைத்து வரப்பட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பூஜித் ஜயசுந்தர வாக்குமூலம் வழங்கியபோதிலும், ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

உரிய தகவல்கள் கிடைக்கப்பெற்ற போதிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் உயிர் அழிவுகள் உள்ளிட்ட பல்வேறு சேதங்கள் இடம்பெற்றதாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 02இல் கைதாகி ஜூலை 09 இல் பிணையில் விடுதலையானபோதிலும், அவர்களது பிணைக்கு எதிராக சட்ட மாஅதிபரினால் முன்வைக்கப்பட்ட மீளாய்வின் அடிப்படையில் கடந்த ஒக்டோபர் 09 ஆம் திகதி மீண்டும் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை (21) முதல் குறித்த ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கி வரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இன்றும் (25) அங்கு முன்னிலையாகியிருந்தார்.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளில் ஒருவரின் ஊரான மாவனல்லை, இடம்பிட்டியைச் சேர்ந்த கிராம சேவகர் மற்றும் மாவனல்லை, ஹிங்குலவைச் சேர்ந்த மற்றும் இருவருக்கும் இன்றையதினம் (25) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது மாவனல்லை சிலை உடைப்பு தொடர்பிலும் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts