குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராக மற்ற மாநிலங்கள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதுபோல் தெலங்கானா தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்கனவே கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் இப்போது தெலங்கானாவும் நிறைவேற்ற உள்ளது
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மற்ற மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியதுபோல் தெலங்கானா அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரும். குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாட்டின் எதிர்காலத்துக்கு உகந்தது அல்ல.
மற்ற மாநிலங்களின் முதல்வர்களிடம் நான் ஏற்கனவே பேசிவிட்டேன். அடுத்த மாதத்தில் ஹைதராபாத்தில் பிராந்திய கட்சிகளின் தலைவர்கள் கொண்ட கூட்டம் நடத்த இருக்கிறேன்.
தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் கொள்கை மதச்சார்பற்றது, ஆதலால், இயல்பாகவே சிஏஏ சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்போம்.. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி மத்திய அரசு தவறான முடிவு எடுத்துள்ளது. அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மக்களுக்கும் மதம், சாதி, வேறுபாடு இல்லாமல் அடிப்படை உரிமைகளை வழங்கியிருக்கிறது. ஆனால், இந்த சட்டத்தில் முஸ்லிம் மக்களை மட்டும் தனித்து வைப்பது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.
இந்த சட்டத்துக்கு ஆதரவு அளிக்கக் கோரி உள்துறை அமைச்சர் அமித் ஷா என்னைத் தொடர்பு கொண்டபோது அவரிடம் என்னால் இந்த சட்டத்துக்கு ஆதரவு அளிக்க முடியாது எனத் தெளிவாகக் கூறிவிட்டேன்.
காஷ்மீருக்கான 370 பிரிவு ரத்து செய்தோம் என்றால், அது நாட்டின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் முயற்சி என்பதால் அதற்கு ஆதரவு அளித்தேன்.
சில நாளேடுகளில் பிரதமர் மோடி தலைமையில் இந்தியா இந்து தேசமாகும் என்று செய்தி வெளியாகியுள்ளது. என்னைப் பொறுத்தவரை இந்த நாட்டுக்கு ஒரு மதம் என்ற அடையாளம் ஆரோக்கியமானது அல்ல.
வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் சிஏஏ குறித்து விவாதிப்போம், சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றுவோம். தேசிய அளவில் சிஏஏவுக்கு எதிராகப் போராட்டம் நடந்துவருவதால், சட்டத்தைத் திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசு சிந்திக்க வேண்டும்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுங்கள் என்று பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொள்கிறேன். மத்திய அமைச்சர்களுக்கே இந்த சட்டத்தில் சரியான புரிதல் இல்லாததால் முரண்பட்ட கருத்துக்களைப் பேசி வருகின்றனர்.
பிராந்திய கட்சிகளின் தலைவர்களுக்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன். தேவைப்பட்டால் மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்டமும் நடத்தப்படும்.
நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் தீர்க்க வேண்டிய நிலையில் ராமர் கோயில் மீது பாஜக கவனம் செலுத்தியதால், ஜார்க்கண்ட் தேர்தலில் தோல்வி அடைந்தது. நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் இருக்கும் போது, அதைத்தீர்க்க முயல மத்திய அரசு முன்வர வில்லை. பொருளாதாரம் என்ன நிலையில் இருக்கிறது. மத்திய அரசு பின்பற்றும் கொள்கைகளால் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது. சிஏஏ ஓரம் வைத்துவிட்டு நாட்டின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்.
இவ்வாறு சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.