தன் பேச்சுக்கு ஆதாரமாக துக்ளக் இதழின் அசலை ரஜினி காட்டாதது ஏன் என, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் 50-வது ஆண்டு விழாவில், ரஜினி பெரியார் தொடர்பான சில கருத்துகளைத் தனது பேச்சில் முன்வைத்தார். அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. ரஜினி மன்னிப்பு கோர வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ரஜினி இன்று (ஜன. 21) செய்தியாளர்களைச் சந்தித்து இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.
அப்போது, “துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் நான் பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. நான் சொன்ன மாதிரியான நிகழ்வு நடக்கவில்லை என்று சொல்கிறார்கள்.
அவுட்லுக் பத்திரிகையில் என்ன நடந்தது என்பதை எழுதியிருக்கிறார்கள். அந்த ஊர்வலத்தில் ராமர் – சீதையை உடையில்லாமல் செருப்பு மாலை அணிந்து கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது இதிலேயே வந்திருக்கிறது. இல்லாத விஷயத்தை நான் ஒன்றும் சொல்லவில்லை. கற்பனையாகவும் சொல்லவில்லை. மற்றவர்கள் சொன்னதையும், இதில் வந்ததையும்தான் சொல்லியிருக்கிறேன். இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது” என்று தெரிவித்தார்.
ரஜினியின் பேச்சு தொடர்பாக கொளத்தூர் மணி தனியார் செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“துக்ளக் இதழின் 50-வது ஆண்டு விழாவில் ரஜினி பேசினார். துக்ளக் இதழில் அந்தப் படம் பிரசுரிக்கப்பட்டதாகத்தான் ரஜினி அப்போது சொன்னார். அதில், உடையில்லாமல் ராமருக்கும் சீதைக்கும் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாகக் கொண்டு வந்தார்கள் என்பதுதான் ரஜினியின் குற்றச்சாட்டு. அதைத்தான் புகைப்படங்களாக சோ துணிச்சலாக வெளியிட்டார், அவை பறிமுதல் செய்யப்பட்டது என்றார்.
அதற்கான விளக்கத்தைத்தான் ரஜினி அளிக்க வேண்டுமே தவிர, வேறு ஏதோ இதழின் நகலைக் காண்பிப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல. ரஜினி உண்மையிலேயே நேர்மையானவராக இருப்பாரேயானால், அவர் துக்ளக் இதழை எடுத்து வந்து காட்டியிருக்க வேண்டும். அவர் துக்ளக் நிர்வாகத்திற்கு மிக நெருக்கமான நண்பராக இருக்கிறார். அதனால்தான் அவர் 50-வது ஆண்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார்.
அந்த இதழை எடுத்து வந்து காட்டுவதுதான் நேர்மையாளனுக்கான செயலாக இருக்கும். ஏதோ இதழில் வந்ததாக அதன் நகலை வெகுதூரத்தில் இருந்து காட்டுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. அவருடைய நாணயக் குறைவுக்கு இது எடுத்துக்காட்டாகிவிடும். தான் நாணயமானவன் என்பதை நிரூபிக்கவாவது, துக்ளக் இதழின் அசலை எடுத்து வந்து காட்டியிக்க வேண்டும்.
ஏனென்றால் அந்த ஊர்வலத்தில் நானும் கலந்துகொண்டவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன். அப்படி உடையில்லாமலோ, செருப்பு மாலை அணிவித்தோ எடுத்து வரப்படவில்லை. மன்னிப்பு கேட்க முடியாது என்று சொல்வதற்கு அவருக்கு உரிமை உண்டு. பாஜக என்றாலே அப்படித்தான். அவர்கள் மன்னிப்பும் கேட்க மாட்டார்கள். அரசு அவர்களை திரும்பியும் பார்க்காது. அதனைப் பயன்படுத்திக்கொண்டுதான் திமிருடனும் ஆணவத்துடனும் பதில் சொல்வதாகக் கருதுகின்றேன்.
ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுக்கும் அளவுக்கு நெருக்கமாக துக்ளக் இதழின் அசலை ரஜினி காண்பிப்பது தான் நேர்மையான செயலாக இருக்கும். அவர் ஆணவத்திற்கான எதிர் நடவடிக்கைகளை நாம் பார்க்கலாம்.
குறிப்பிட்ட அந்த ஊர்வலத்தில், செருப்பொன்று வீசப்பட்டது, ஊர்வலத்தில் இருந்தவர்கள் அதனை எடுத்து அடித்தார்கள். முதல் வினையைப் பற்றி பேசாமல் எதிர்வினையை பற்றி மட்டும் பேசிக்கொண்டிருப்பது சரியல்ல. செருப்பு வீசப்பட்டது குறித்த பதிவுகளைப் பார்க்க வேண்டும். இப்படி ரஜினி நடந்து கொள்வது கேவலமான செயல்”.
இவ்வாறு கொளத்தூர் மணி தெரிவித்தார்.