வடக்கு, கிழக்கில் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் ‘ தமிழ் மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டுக்கான மன்றம்’ ஒன்றை அமைத்து செயற்படுவதற்கான அங்குரார்ப்பண கூட்டம் யாழ்.மறைமாவட்ட ஆயரில்லத்தில் நேற்று நடைபெற்றது.
நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் யாழ். ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேனார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வடக்கு கிழக்கின் துறைசார் பேராசிரியர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், பொருளியலாளர்கள், புலமையாளர்கள், கல்வியாளர்கள், பல்துறைசார் நிபுணர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முயற்சிகள் ஒருபுறம் நடைபெறும் அதேவேளை, யுத்தத்தினால் மிக மோசமாக பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி மற்றும் மேம்பாடு ஆகியவற்றை சமாந்திரமாக முன்னெடுத்து செல்வதற்கு சிவில் சமூகத்தின் காத்திரமான பங்களிப்பு அவசியம் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்ததன் பின்னணியிலேயே இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.
யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்துள்ள போதிலும் வடக்கு கிழக்கில் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான நடவடிக்கைகள், தமிழ் மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை பிரதிபலிக்கும் வகையிலான செயற்றிட்டங்கள் இன்னமும் மேற்கொள்ளப்படாத நிலையே காணப்படுகின்றது.
இந்த அவசியத்தை கவனத்திற்கொண்டே எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை ஆராயும் வகையில் மேற்படி கூட்டம் நடைபெற்றது.
அறிவு, ஆய்வு மற்றும் செயற்திட்டங்களின் வினைத்திறன்மிக்க முகாமைத்துவத்தின் ஊடாகவும் வெளிநாடுகளில் கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் மற்றும் வளங்களை பயன்படுத்தி தமிழ் மக்களின் செழிப்பு மற்றும் வலுவூட்டலுக்காக மன்றம் ஒன்றை ஸ்தாபித்து செயற்படுவது என்று இந்த கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
யாழ். ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேனார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோரின் தலைமையில் வடக்கு கிழக்கை சேர்ந்த 50 க்கும் அதிகமான துறைசார் நிபுணர்கள், பேராசிரியர்கள் மற்றும் புலமையாளர்கள் இணைந்து செயற்படுவதற்கு முன்வந்துள்ளனர்.