மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் உலகப் புகழ்பெற்ற நிகழ்ச்சி மேன் வெர்சஸ் வைல்டு. இக்கட்டான சூழ்நிலைகளில் உயிர் பிழைத்திருப்பதற்கான வழிமுறைகளைச் சொல்லும் நிகழ்ச்சியான மேன் வர்சஸ் வைல்டு நிகழ்ச்சி, இம்முறை கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆவணப்படத்தின் படப்பிடிப்பிற்காக பந்திபுரா புலிகள் காப்பகம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பேர் கிரில்ஸுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பேர் கிரில்ஸ் இயக்கும் இந்த நிகழ்ச்சிக்காக காட்டுப்பகுதியில் ரஜினிகாந்த் 2 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கடந்த ஆகஸ்டு மாதம் கலந்து கொண்டு பேர் கிரில்சுடன் காடுகளில் பயணம் செய்தார். இது டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பானது.
மோடியின் பாதையில் ரஜினியும் தன் வாழ்க்கை குறித்து பேர் கிரில்ஸுடன் பேசுவது போல் அமையும்.
இதே போல் மற்றொரு நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கலந்து கொள்கிறார்.
இதுகுறித்து காட்டு இலாகா அதிகாரி ஒருவர் கூறும்போது:-
ஜனவரி 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் சிறப்பு விருந்தினருடன் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செவ்வாயன்று ரஜினிகாந்த் மற்றும் 30 ஆம் தேதி பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் ஆகியோருக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
சுல்தான் பாட்டேரி நெடுஞ்சாலை மற்றும் முல்லேஹோல், மத்தூர் மற்றும் கல்கேர் எல்லைகளில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் சுற்றுலா அல்லாத பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். இதனால் சுற்றுலா அல்லது வழக்கமான வன ரோந்து நடவடிக்கைகள் பாதிக்கப்படாது. படப்பிடிப்பு சிறப்பு வன பாதுகாப்பின் கீழ் செய்யப்படும், மேலும் இருப்பிடங்கள் குறித்து யாரும் அறிந்திருக்க மாட்டார்கள் என கூறினார்.