சந்தானம் படங்களின் வெளியீட்டுப் பிரச்சினை தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் தனக்கு ஏவிஎம்மில் நடந்த அவமரியாதை குறித்து பாரதிராஜா பேசினார்.
இது தொடர்பாக பாரதிராஜா பேசியதாவது:
”அதிசயம் ஆனால் உண்மை. இது ஒரு ஆச்சரியமான மேடை. இரண்டு தயாரிப்பாளர்களுமே ஒரு பெரும் கத்திச்சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். என்ன இது பிரச்சினையாக இருக்கிறது. போய் பார்ப்போம் என்று இருவரையும் பார்த்தவுடன், கத்தியைக் கீழே போட்டுவிட்டார்கள். இதுதான் பாரதிராஜா என்ற பெயருக்குக் கிடைத்த மரியாதை.
இரண்டு தரப்பிலும் நியாயம் இருக்கிறது. ‘சர்வர் சுந்தரம்’ தயாரிப்பாளர் செல்வகுமார் படம் முடிந்து நாளாகிவிட்டது. இப்போதுதான் ரிலீஸ் பண்றார். இங்கு படம் பண்ணுவது கஷ்டம். திரையுலகிற்கு வந்து 48 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும், இப்போது படம் எடுத்து முழித்துக் கொண்டிருக்கிறேன். ஆசைப்பட்டு திரையுலகிற்குள் வரும் தயாரிப்பாளர்கள் உடைந்து போகக் கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
இந்த இரண்டு படத்திலுமே ஒரே கதாநாயகன். நாங்கள் சொன்ன தீர்ப்பை விட, இருவரின் பெருந்தன்மைதான் பெரியது. ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் மீது எனக்குக் கொஞ்சம் அன்பு அதிகம். அந்தத் தலைப்பின் மீது எனக்குப் பல மலரும் நினைவுகள் உண்டு. அப்போது வேலைக்கு அலைந்து கொண்டிருந்த காலத்தில் கோதண்டபாணி என்பவரிடம் வேலை பார்த்தேன். அவர் படங்களை வாங்கி விற்பவர்.
தினமும் 2 ரூபாய் சம்பளம் கொடுப்பார். என்ன வேலை என்றால், அவருக்கு வரும் போனை எடுத்து யாரெல்லாம் பேசினார்கள் என்று எழுதி வைக்க வேண்டும். பாரதிராஜா என்ற செடி முளைத்து வளர்வதற்கு எவ்வளவு பாடுபட்டிருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். நான் நாகேஷ் மீது எப்போதுமே பெரிய அன்பு கொண்டவன்.
அப்போது ‘சர்வர் சுந்தரம்’ படத்தை மீடியேட்டர்களுக்கு எல்லாம் போட்டுக் காட்டுகிறார்கள். அவர்களிடம், நானும் பார்க்க வருகிறேன் என்றவுடன் அழைத்துச் சென்றார்கள். ஏவிஎம் திரையரங்கிற்குள் போய் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கும்போது, பேட்டரி லைட் அடித்துக் கொண்டே வந்து என்னை எழுந்திரு என்று சொன்னார்கள். இவருடன்தான் வந்தேன் என்றேன். என்னை அழைத்துச் சென்றவர்களோ, ஏவிஎம் நிறுவனம் என்பதால் என்னைத் தெரியாது என்று சொல்லிவிட்டார்கள்.
உடனே, என் சட்டையைப் பிடித்து என்னை எழுப்பி, ஏவிஎம் கேட்டிற்கு வெளியே தள்ளினார் அடைக்கலம் என்ற மேலாளர். அப்போது கண்ணீருடன் பார்த்துக்கொண்டே, ஒரு நாளாவது பாரதிராஜா நடிகனாவது, இயக்குநராவது வந்து நிற்பேன் என்று சபதம் எடுத்துத் திரும்பினேன். அதே நிறுவனம் என்னை அழைத்து ‘புதுமைப்பெண்’ படம் கொடுத்தது. அப்போது ஏவிஎம் சரவணனிடமே இந்தச் சம்பவத்தைச் சொன்னேன். இப்படி ‘சர்வர் சுந்தரம்’ மீது எனக்கு நிறைய நினைவுகள் உள்ளன.
ஆகையால், நாகேஷின் நினைவு நாளில் ‘சர்வர் சுந்தரம்’ வெளியாக வேண்டும் என்பது என் ஆசை. இரண்டு தயாரிப்பாளர்களையும் உட்கார வைத்து, 2 படங்கள் ஒரே நாளில் வந்தால் என்னவாகும் என்று எடுத்துச் சொன்னவுடன் செல்வகுமார் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்தார். அதேபோல் ‘டகால்டி’ தயாரிப்பாளருக்கு இது முதல் படம்.
தயாரிப்பாளர் சங்கக் குழு இதைச் சாதித்துள்ளோம். விரைவில் தேர்தல் வைத்து புதிய நிர்வாகத்தைத் தேர்வு செய்யவுள்ளோம். நிர்வாகம் கொஞ்சம் இறுக்கமாகக் கிடக்கிறது. மிக விரைவில் தேர்தல் நடக்கும். இரண்டு தயாரிப்பாளர்களுக்கும் எனது நன்றிகள். இரு படங்களும் வெற்றி பெற எனது வாழ்த்துகள்”.
இவ்வாறு பாரதிராஜா பேசினார்.