கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் அல்லது இடம் ஒன்று இனங்காணப்பட்டால் அது தொடர்பில் அரச சுகாதார அதிகாரிகளால் ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சிலரது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும், அவ்வாறு வேறு எந்த வைத்தியசாலைகளிலும் அவ்வாறான நோயாளர்கள் அனுமதிக்கப்படவில்லை எனவும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
———
கொரோனா வைரஸின் காரணமாக பாடசாலைகள் மூடப்படமாட்டாது.
இது தொடர்பில் எந்தவித தீர்மானமும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என்று உயர் கல்வி அமைச்சரும், பதில் கல்வி அமைச்சருமாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளை நிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானிக்க வில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சீனாவில் பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் குறித்து சமூக ஊடகங்களில் வெளிவரும் உண்மைக்கு புறம்பான மற்றும் போலியான விடயங்களில் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
———
விமான நிலையத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மருத்துவர்கள் குழு, மற்றும் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து வைத்தியசாலை அதிகாரிகள் நிர்வாகத்தினர் ஆகியோர் முகக் கவசம் அணிவதுடன், கையுறைகள் மற்றும் டாக்டர்கள் தலையை மூடும் வகையிலான கவசத்தை அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பிரிவினருக்கான ஆலோசனைகள் அடங்கிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிப்பட்டுள்ளது.
அத்துடன் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் அடங்கிய நான்கு பக்கங்களைக் கொண்ட விசேட ஆலோசனைக் கோவை சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டில் தங்கியிருக்கும் காலம், அவர்கள் பயணிக்கவுள்ள பிரதேசங்கள் மற்றும் தங்கியிருக்கும் ஹோட்டல்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளுக்காக பொது சுகாதார சேவை பரிசோதகர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக. சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.