யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் உள்ள வீடொன்றிலிருந்து 142 கிலோ 995 கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், அதனைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுண்டுக்குளி, பழைய பூங்கா வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு (29) இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பிராந்திய மோட்டார் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் நிறை 142 கிலோ 995 கிராம் ஆகும். இதன் பெறுமதி சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் வீட்டின் அறை ஒன்றில் 68 பொதிகளைக் கொண்ட 04 பயணப்பொதிகளில் கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 32 வயதான அவர் கொழும்பில் வசித்துவிட்டு திருமணத்தின் பின் குறித்த விலாசத்தில் வசித்து வருகிறார்.
சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கஞ்சா போதைப்பொருளும் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்