கமட்ட கெயக் ரட்டட்ட ஹெட்டக் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் குருநாகல் கிரிபாவ வராவெவயில் இன்று (01) முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் 14,022 குடும்பங்களுக்காக வீடுகளைகளை நிர்மாணிகும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
ஜனாதிபதியின் சுபீட்சத்திற்கான நோக்கு, விஞ்ஞாபனத்திற்கமைவாக சகல குடும்பங்களுக்கும் வீடு வழங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் இத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்திற்கு 8,400 மில்லியன் ரூபாவுக்கும் மேல் செலவிடப்படவுள்ளதுடன், 60 தினங்களில் பூர்த்தி செய்யவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
——–
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக நேற்று கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 8 தமிழ்நாட்டு மீனவர்களையும் 12 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டார்.
இந்தியாவின் தமிழ் நாடு, இராமநாதபுரம் மற்றும் காயல்பட்டினம் பிரதேசங்களில் வசிக்கும் எட்டு மீனவர்களான அருள்தாஸ், கர்ணன், ராஜூ, ஜான், மரியசாது, மரிரோஸ்டன் மற்றும் சூசை ஆகிய எட்டு மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.
தமிழ்நாடு கோடியக்கரை பிரதேசத்தில் இருந்து மீன்பிடிக்க புறப்பட்டு முல்லைத்தீவு மாவட்டம் சாலை கடற்பகுதியில் நேற்று அதிகாலை அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும்போது இலங்கை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு கடல் வள மற்றும் நீரியல் திணைக்கள அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர்.
ஒப்படைக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் திருகோணமலை பதில் நீதிவான் அன்பரின் வாசல்வதளத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையிலே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
——–
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் அனைவருக்கும் இன்று (31) முதல் விசேட படிவமொன்று வழங்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவியுள்ளதைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் அவசரநிலையை அறிவித்துள்ளமை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு சில தகவல்களை பெறும் நோக்கில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இது வரை குறித்த படிவம், சீனாவிலிருந்து வருவோருக்கு மாத்திரம் வழங்கப்பட்டு பூரணப்படுத்தப்பட்ட நிலையில், இன்று (31) முதல் வெளிநாட்டிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் அதனை விநியோகிக்க நடவடிக்கை எடுத்தள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜா சிங்க தெரிவித்தார்.
இன்று (31) பிற்பகல் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
————
கொரோனா வைரஸை பயன்படுத்தி சீன எதிர்ப்பு அலையை எவரும் உருவாக்க வேண்டாமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அம்பாந்தோட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா வைரஸ் காரணமாக நாட்டிலுள்ள ஏனைய வைரஸ்கள் தொடர்பில் தற்போது எவரும் பேசுவதில்லை. ரஞ்சன் ராமநாயக்கவின் செயற்பாடுகளை மறந்துள்ளனர். தினம் தினம் நாட்டில் பலர் டெங்கு நோய்க்கு உள்ளாகுகின்றனர். கொரோனா வைரஸ் போன்று டெங்குவை ஒழிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிலர் சீன நாட்டவரை கண்டால் அருகில் செல்லவும் அச்சப்படுகின்றனர். இந்நாட்டில் பல வருடங்களாக வசிக்கும் சீனர்களை கண்டாலும் அச்சமடைகின்றனர். வேலைத்தளங்களிலும் சீனர்கள் அருகில் எவரும் செல்வதில்லை. அவ்வாறு எவரையும் ஒதுக்கிவைப்பது நல்லதல்ல.
சீனா இலங்கைக்கு பாரிய உதவிகளை வழங்கியுள்ளது. அவற்றை மறக்கக் கூடாது. இன்றளவும் பாரிய அபிவிருத்திகளையும் உதவிகளையும் முதலீடுகளையும் சீனா இலங்கைக்கு வழங்குகிறது. அவர்களுடைய நாட்டில் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அது உலகளாவிய ரீதியில் பரவலடைகிறது.
எமது நாட்டுக்குகள் வைரஸ் பரவாமல் இருப்பதை தடுக்கவே நாம் செயற்பட வேண்டும். சர்வதேசத்துடன் சிறந்த உறவை நாம் கட்டியெழுப்பியுள்ளோம் என்றார்.