மொழி, கலாசாரத்தை இழக்கும் இனம் வரலாற்றிலிருந்து அழிக்கப்படும்

இலங்கையில் இலட்சக்கணக்கான மனித உயிர்கள் அதிலும் குறிப்பாக தமிழர்கள் ஒழுக்கம் நாகரீகத்திற்காக பலி கொடுக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் கொழும்பு கம்பன் விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு சனிக்கிழமை மாலை கொழும்பு இராமகிருஷ்ணன் மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அவர் தொடக்கவுரை நிகழ்த்துகையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:-

பாரதிதாசன் சொல்வது போல தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர். எனவே தமிழுக்குத்தான் இந்த விழா. இங்கு வள்ளுவர் என்ன சொல்கின்றார் என்றால் ஒழக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும். அவ்வாறெனில் பாரதிதாசன் தமிழை உயிருக்கு நிகர் என்று சொன்னபொழுது வள்ளுவர் உயிரைவிட ஒழுக்கமே பெரிது என்கின்றார். எனவே ஒரு இனம், அந்த நாடு, அதன் ஆட்சியாளர்கள் ஆகியோர்களினுடைய ஒழுக்கம்தான் பண்பாட்டினுடைய மிக அடிப்படையாகும். அந்த பண்பாடுதான் நாகரீகத்தின் உச்சநிலையிலுள்ளவர்களுக்குரிய மொழியாகவும் இருக்க முடியும். எனவே எந்த இனம் தன்னுடைய நாடு, மொழி, கலாச்சாரம், பண்பாடுகளை இழந்திருக்கின்றதோ அவ்வினம் வரலாற்றிலிருந்து அழிக்கப்பட்டிருக்கின்றார்கள். இங்கும் தமிழர்களுடைய உயிர்கள் ஒழுக்கம், நாகரீகத்திற்காக பலிகொடுக்கப்பட்டிருக்கின்றது.

தமிழர்களின் பண்பாடு, கலை, கலாச்சாரம், குடிமகனின் ஜனநாயக வகிபாகங்கள் என அனைத்தும் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கம்பனின் வரை விலக்கணம் ஒவ்வொரு அத்தியாயத்திலும் தெளிவாக கூறப்பட்டிருக்கின்றது.

கம்பன் கழகம் விழாவை கொண்டாடுகின்றது என்றால் அந்த அந்த உயர்ந்த நாகரீகம், பண்பாட்டை நாம் போற்றுகின்றோம் என்பதுதான் அர்த்தமாகும்.

Related posts