நாம் இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். நாம் பெற்றுக் கொண்ட இச்சுதந்திரம் கடந்த சில வருடங்களாக கடுமையான சவாலுக்கு உட்பட்டதை அனைவரும் அவதானித்தனர்.
சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வது மற்றும் அதனைப் பாதுகாத்துக் கொள்வது ஆகியன வெவ்வேறாக நோக்கப்படவேண்டிய இரண்டுஅம்சங்கள் என்பதே அந்த அனுபவங்களினூடாக நாம் கற்றுக்கொண்ட பாடமாகும். 1948 ஆம் ஆண்டு சட்ட ரீதியாக கிடைத்த சுதந்திரம், 2015 ஆம் ஆண்டு பிழையான அரசியலூடாக இல்லாமற் போகும் அபாயத்தை எதிர்நோக்கியது. எமக்குக் கிடைத்த சுதந்திரம் பாதுகாக்கப்படவேண்டும் என்ற ஒரு திடவுறுதி எமது மக்களிடம் காணப்பட்டது. அதனைக் கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகளூடாக நாம் கண்டு கொண்டோம்.
சுதந்திரம் கிடைத்த பின்னரான கடந்த 72 வருடங்களை நாம் மீட்டிப் பார்க்கவேண்டியுள்ளது அவற்றில் மகிழ்ச்சியடைய முடியுமான அம்சங்களும் உள்ளன. அவ்வப்போது ஏற்பட்ட கடுமையான சவால்களின் மத்தியிலும் கூட சர்வஜன வாக்குரிமை அடிப்படையிலான பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமை இந்தநாட்டில் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.
மக்களின் சுகாதார நிலைமை,எழுத்தறிவு போன்ற விடயங்களில் நாம் ஏனைய பலநாடுகளை விடவும் ஒப்பீட்டளவில் முன்னிலை வகிக்கிறோம். இந்த நாட்டில் சுதந்திரமான ஊடகத்துறை காணப்படுகிறது. எமது பிரஜைகளுக்குத் தமது தனிப்பட்டபாதுகாப்பு தொடர்பான நம்பிக்கையுடன் வாழ முடியுமாக உள்ளது. 2006 முதல் 2014 வரையான காலப் பகுதியில் பொருளாதார ரீதியாகவும் சிறப்பான அடைவுகளைப் பெற்றுக்கொண்டோம்.
அரசியல் காரணமாகப் பாதிக்கப்பட்ட, பொருளாதார முன்னேற்றத்தை நாட்டிற்கு மீண்டும் பெற்றுக் கொடுப்பதே எமக்கு முன்னால் உள்ள சவாலாகும். இன்று புதியதொருஅரசாங்கத்துடன் புதிய தசாப்தத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
மக்களிடம் குறிப்பாக, இளம் சந்ததியினரிடம் நாட்டைக் கட்டியெழுப்புவது தொடர்பானதொரு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கை பொன்னான யுகத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது என்பதை இந்த சுதந்திர தினத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவிக்க முடியும்.
அனைத்து இனப்பிரிவுகள், சமயங்களுக்கு உரித்தான மக்களும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் மாபெரும் திட்டத்திற்குப் பங்களிப்புச் செய்வார்கள் என்பதே எனது நம்பிக்கையாகும்.