தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்குப் புதிய சிறப்பு அதிகாரியை நியமித்து அரசாணை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததால், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள தனி அதிகாரியாக மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரை வணிகவரித்துறை நியமித்தது.
தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்தும் அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனி அதிகாரி நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையில் தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், தனது வாதத்தில், “ சிறப்பு அதிகாரி பதவிக் காலம் முடிவடைவதாலும், அவர் பணிமாறுதல் செய்யப்பட்டதாலும், அடுத்த ஓராண்டுக்கு புதிய சிறப்பு அதிகாரியாக பதிவுத் துறை உதவி ஐஜி மஞ்சுளாவை நியமித்து, ஜனவரி 2-ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது” எனத் தெரிவித்தார்.
இதற்கு விஷால் தரப்பு வழக்கறிஞர் கிருஷ்ணா தரப்பில், “தமிழக அரசு மேலும் ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியை நியமித்தது சட்ட விரோதமானது. தயாரிப்பாளர் சங்கத்திற்கு தமிழக அரசு நியமித்த சிறப்பு அதிகாரியின் பதவிக்காலம் மார்ச் மாதம் முடிவடைவதால், தயரிப்பாளர் சங்கத் தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும்” என்று வாதம் வைத்தார்.
இதையடுத்து, தயாரிப்பாளர் சங்கம் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.