முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல்.வலயத்தில் உள்ள தமிழ் மக்களின் காணிகள், தெற்கு மக்களுக்கு கையளிக்கப்படவில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அப்பகுதியில், தமிழ் மக்களின் காணிகள் தொடர்பில் பிரச்சினைகள் இருக்குமானால் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மூலம் மீண்டும் காணிக் கச்சேரி நடத்தப்பட்டு அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகள் வேளையில் வன்னிமாவட்ட எம் பி. சார்ள்ஸ் நிர்மலநாதன், எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. தமது கேள்வியின் போது,
முல்லைத்தீவில் மகாவலி எல். வலயத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் தெற்கு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அது தொடர்பில் ஏற்கனவே மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் உட்பட பல சந்தர்ப்பங்களில் நான் குறிப்பிட்டுள்ளேன். எனினும் இது வரை அதற்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் பிரதமர் இதற்கான தீர்வை பெற்றுத்தர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பில் மேலும் பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இக்காணிகள் தொடர்பில் பிரச்சினைகள் இருந்தால் அதைத் தீர்ப்பதற்கு காணிகள் கச்சேரி ஒன்று நடத்தப்படும். எனினும் அதற்கு எவரும் விண்ணப்பிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
ஏனைய பிரதேசங்களில் மகாவலி வலயங்களில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களும் வாழ்கின்றனர். அதற்கான பொதுவான முறைமை ஒன்றும் உள்ளது. அதேபோன்றே மகாவலி எல் வலயத்திலும் பொதுவான முறைமையில் மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். எனினும் அங்கு தமிழ் மக்களின் காணிகளை பெற்று தெற்கு மக்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இங்கு மேலும் தெரிவித்த சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி., மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளுக்கு மேலதிகமாக உள்ள காணிகளை, மகாவலி எல் வலயத்தின் பொறுப்பிலிருந்து சம்பந்தப்பட்ட பிரதேச சபைகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க முடியுமா என பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த பிரதமர், மீண்டும் காணிகள் கச்சேரி ஒன்று நடாத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்