நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் அரசுக்கு சம்பந்தம் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் கடைசியாக நடித்த அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டது. இந்நிறுவனத்துக்குரிய 20 இடங்களில் நேற்று காலை முதல் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு கடன் கொடுத்த சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வசித்து வரும் சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரி துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர் ” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு கடலூரில் உள்ள நெய்வேலி என்.எல்.சி. 2வது சுரங்க பகுதியில் நடந்து வந்தது.
இப்படப்பிடிப்பு நடைபெறும் தளத்திற்கு சென்ற வருமான வரி துறை அவருக்கு சம்மன் வழங்கியது. இதனால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை விசாரித்த நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஏ.ஜி.எஸ். நிறுவனத்திடம் நடிகர் விஜய்க்கு பிகில் படத்தில் நடித்ததற்காக எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பபட்டது. இது குறித்து தகவல் பெறவும், நடிகர் விஜய் பெற்ற தொகைக்கான வரியை செலுத்தினாரா என்பது குறித்து ஆராயவுமே விஜயிடம் இந்த விசாரணை என தகவல் வெளியானது.
இதன்பின்பு படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் விஜயை வருமான வரித்துறையினர் அழைத்து சென்றனர். விஜயிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவரது காரிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை அழைத்து சென்றனர்.
இதனிடையே, சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி துறை சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதேபோன்று நீலாங்கரையில் உள்ள அவரது மற்றொரு வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து அவருக்கு சொந்தமான சாலிக்கிராமம் வீடு, பனையூரில் உள்ள பண்ணை வீடு ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், நடிகர் விஜய் வீட்டில் 2 ஆவது நாளாக வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தினர். சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களிலும் மற்றும் ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களிலும் 2 ஆவது நாளாக இன்று வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, டி.என்.பி.எஸ்.சி. விவகாரத்தில் ஆதாரமின்றி எதுவும் சொல்லக்கூடாது. வதந்தி பரப்புபவர்களுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பும் என கூறினார்.
நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் அரசுக்கு சம்பந்தம் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இது ஜனநாயக நாடு. இங்கு யாரையும் யாரும் பழிவாங்க முடியாது. வருமான வரி சோதனை நடப்பதில் அரசுக்கு சம்பந்தம் இல்லை. அவர்கள் கடமையை செய்து வருகிறார்கள் என கூறியுள்ளார்.