குடியுரிமைத் திருத்தச்சட்டம் அரசியலமைப்புச் சட்டப்படி சட்டப்பூர்வமானது, அனைத்து மாநில அரசுகளும் நடைமுறைப்படுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது, மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியுரிமைத் திருத்தச் சட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி 60-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு உர உள்ளன.
இந்த நிலையில், பெண் வழக்கறிஞர் புனீத் கவுர் தண்டா என்பவர் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி ஒருமனுவை இன்று தாக்கல் செய்தார். இந்த மனுவில் ” மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுபடியானது, சட்டப்பூர்வமானது என அறிவித்து, அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்.
அரசியல் கட்சிகள் குடியுரிமைத் திருத்ச்சட்டம் தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்பி வன்முறையை தூண்டுகின்றன. அந்தகட்சிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைஎடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும்.
ஊடகங்களும், நாளேடுகளும் கூட இந்த சட்டம்தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்புகின்றன. அந்த ஊடகங்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்.
குடியுரிமைத் திருத்தச்சட்டம் முஸ்லிம் மக்களுக்கு எதிரான சட்டம், நடைமுறைக்க வந்தால் அவர்கள் நாட்டை விட்டு அனுப்பப்படுவார்கள் என்று அரசியல்கட்சிகள் தவறான தகவலை பரப்பி, வன்முறையைதூண்டி விடுகின்றன. இது தேசத்துக்கு அவப்பெயரையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்துகிறது. ஆதலால், குடியுரிமைத் திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது அல்ல, எந்த குடிமகனுக்கும் எதிரானது அல்ல என்று அறிவிக்க வேண்டும்” எனக் கோரி இருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் நீதிபதி பிஆர்.காவே, சூர்யகாந்த் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த மனுவைப் பார்த்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அதிர்ச்சியடைந்தார். தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறுகையில், ” இந்த மனு எனக்கு உண்மையில் அதிர்ச்சியளிக்கிறது. என் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி செல்லுபடியானது என்று அறிவியுங்கள் என்று கோரி தாக்கல் செய்த முதல் மனு இதுவாகத்தான் இருக்கும். தேசம் தற்போது கடினமான சூழலில் உள்ளது.
அமைதியை நிலைநாட்டுவது மிகவும் முக்கியம். இதுபோன்ற மனுக்கள் அதற்கு உதவாது. நீதிமன்றத்தின் பணி என்பது, ஒரு சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு இயற்றப்பட்டதா என்பதை ஆய்வு செய்வதுதான். அதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதைத் தீர்த்து வைக்கலாம். ஆனால் இயற்றப்பட்ட ஒரு சட்டம் அரசியலமைப்புச்சட்டப்படி சரியானது, சட்டப்பூர்வமானது என்று அறிவிக்க இயலாது. ஒரு சட்டம் எப்படி அரசியலமைப்பு விதிமுறைகளை மீறி இயற்ற முடியுமா, நாங்கள் எவ்வாறு அனுமானத்தின் அடிப்படையில் எப்படி செல்லுபடியானது என்று கூறமுடியும்.நீங்கள் வழக்கறிஞர்தானே நீ்ங்களே கூறுங்கள். இந்த சட்டத்துக்கு எதிராக 60-க்கும் மேற்பட்ட மனுக்கள் வரும் 22-ம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. மதச்சார்பின்மைக்கு மாறாக இந்த சட்டம் இருப்பதாகக் கூறி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுவை அவசர வழக்காகக் கருதி விசாரணைக்கு ஏற்க முடியாது. வழக்கம் போல் பட்டியலிடப்படும்” எனத் தெரிவித்தார்.