கொரோனா வைரசை எதிர்த்துப் போரிட பில் கேட்ஸ் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ரூ. 10 கோடி நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளது.
சீனாவில் ஹூபெ மாகாணத்தில் உள்ள வுகான் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் முதன் முதலாக கண்டு பிடிக்கப்பட்டது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த வுகான் நகரம் சீல் வைக்கப்பட்டுள்ளது. என்றாலும் சீனாவில் உள்ள 31 மாவட்டங்களில் அந்த வைரஸ் கிடுகிடுவென பரவி விட்டது. இதனால் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரசுக்கு பாதிக்கப்படுவதை தடுக்க முடியாமல் உள்ளது. இதன் காரணமாக சீனாவில் தினமும் உயிர்பலியும் நடந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 636 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 69 பேர் இந்த வைரஸ் தாக்கி இறந்துள்ளனர்.
சீனாவில் தற்போது சுமார் 32 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி தவிக்கிறார்கள். இவர்களில் சுமார் 22 ஆயிரம் பேர் வுகான் நகரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் சுமார் 4 ஆயிரம் பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2447 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழப்பவர்கள் உடல் உடனுக்குடன் தகனம் செய்யப்படுகிறது. இந்த வைரசை எப்படி தடுப்பது என்பது புரியாமல் சீனா திணறியபடி உள்ளன.
இதற்கிடையே சீனா நாட்டுக்கு பெரும்பாலான நாடுகள் விமான சேவையை ரத்து செய்து விட்டன. அதோடு தங்களது நாட்டவர்களை மீட்க முன்னுரிமை கொடுத்து விமானங்களை இயக்குகின்றன. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தற்போது 25 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில் தங்கள் நாட்டுக்கும் அந்த வைரஸ் வந்துவிடுமோ என்று பல நாடுகள் பீதியில் உள்ளன.
சீனாவுடன் உள்ள அனைத்து வர்த்தக தொடர்புகளையும் பெரும்பாலான நாடுகள் நிறுத்தி வைத்துள்ளன. இதன் காரணமாக சீன பொருளாதாரத்திலும் வரலாறு காணாத அளவு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனா மற்றும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பில் கேட்ஸ் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை 100 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 10 கோடி ரூபாய்) வழங்குவதாக அறிவித்துள்ளது.
அரசாங்கம் மட்டுமின்றி பலதரப்பு நிறுவனங்கள், தனியார் துறைகள் இந்த வைரஸை எதிர்த்து போராடவும், தங்கள் நாட்டில் பாதிக்கப்பட்ட குடிமக்களை பாதுகாக்கவும் உதவ வேண்டும். இதற்காக தேவைப்படும் தொழில்நுட்ப மருத்துவக் கருவிகளை அளிக்க வேண்டும். உலக சுகாதார அமைப்பும் உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சுஸ்மான் கூறியுள்ளார்.
வைரஸைக் கண்டறிதல், நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை முறைகளை மேற்கொள்ளுதல், தடுப்பூசிகள் மருந்துகளை கண்டறிதல் உள்ளிட்டவைகளுக்கு இது உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.