முதன்முதலாக கொரோனா வைரஸ் குறித்து எச்சரித்த டொக்டர் லீ வென்லியாங், கொரோனாவைரஸ் தாக்குதல் காரணமாகஉயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (06) அவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவின் வூறான் நகரிலுள்ள வைத்தியசாலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவந்தது. இதுபற்றி குறித்த வைத்தியசாலையின் டொக்டர் லீ வென்லியாங் (வயது 34) தனது கல்லூரி தோழர்களான ஏனைய வைத்தியர்களுக்கு விரிவான தகவல் அனுப்பி எச்சரித்திருந்தார். இந்நிலையில் டொக்டர் லீயையும் கொரோனா வைரஸ் தாக்கியது. அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
———
கொரோனா தொற்றியதாக சந்தேகிக்கும் 16நோயாளர்கள் நேற்று வரை பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்ததோடு தவறான தகவல்கள் காரணமாக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீனாவில் கல்வி பயின்ற இலங்கை மாணவி தொடர்பில் பரபரப்பு ஏற்பட்டதாக தொற்று நோய் பிரிவு பிரதானி டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
நேற்று முன்தினம் 125பேர் அனுமதிக்கப்பட்டதோடு நோற்று 135பேர் அனுமதிக்கப்பட்டார்கள்.வேறு நோய்கள் காரணமாக அனுமதிக்கப்பட்டோர் வெளியேறிவிடுவதாக கூறிய அவர், கொரோனா தொற்றி குணமடைந்த சீனப் பெண் தொடர்பில் பல்வேறு பரிசோதனைகள் நடத்தி அறிக்கைகள் பெற்று வருவதாகவும் கூறினார்.
சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் மேலும் குறிப்பிடுகையில்,
சந்தேகத்திற்கிடமான 16பேரில் மூவர் கொழும்பிலும் நால்வர் கண்டியிலும் தலா இருவர் கராபிட்டிய, நீர்கொழும்பு, வைத்தியசாலைகளிலும் ராகம, கம்பஹ, பதுளை, யாழ்ப்பாணம், குருணாகல் வைத்தியசாலைகளில் தலா ஒருவரும் சிகிச்சை பெறுகின்றனர்.
தியதலாவ முகமில் சிகிச்சை பெற்ற மாணவி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தவறான தகவலினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சீனாவில் கற்ற மொணராகலை பகுதி மாணவியே இவ்வாறு அனுமிக்கப்பட்டிருந்தார்.
சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க கூறுகையில்,சந்தேகத்திற்கிட மானவர்களின் இரத்த மாதிரிகள் மாத்திரமே பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்றார்.
———
அரசியல் ரீதியாகவும் அபிவிருத்தி ரீதியாகவும் தமிழ் மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே கடந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினர். எனினும் அவை எதுவும் நடக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் நேற்றுத் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்கள் நன்மை பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதனை தற்போதைய அரசாங்கம் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நிதியமைச்சின் வியாபார அறவீட்டு சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்;
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. எனினும் அந்த அடிக்கல் இன்னும் வெறும் அடிக்கல்லாகவே உள்ளன.
அந்த இடங்களில் தென்னை மரங்கள் நாட்டி இருந்தால் இப்போது இளநீர் கூட கிடைத்திருக்கும்.
இந்த வகையில் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மக்களுக்கு கண்கட்டி வித்தையே காட்டப்பட்டது. கடந்த அரசாங்கம் மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டவர்களும் அவ்வாறே செய்தனர்.
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மானியம், காப்புறுதி வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நுண் கடன் தொடர்பில் அரசாங்கம்அறிவித்திருந்த போதும் அதை அலட்சியம் செய்து கடன் வழங்கும் நிறுவனங்கள் அதிக வட்டிக்கு கடன் வழங்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றன.
இதனால்கடன் பெறும் மக்கள் வட்டியை செலுத்த முடியாமல் தற்கொலைக்கு போகின்ற நிலை ஏற்படுகிறது. அது தொடர்பில் அரசாங்கம் கவனம் எடுக்க வேண்டும்.
அதேபோன்று வடக்கு கிழக்கு மலையக பகுதிகளில் 650 தமிழ் மொழிமூல பாடசாலைகளில் அதிபர்கள் இல்லாத நிலை உள்ளது.அதிபர் சேவை தரம் மூன்றில் அதிபர் சேவை போட்டிப் பரீட்சையில் தோற்றியுள்ளவர்களை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சருக்கும் எழுத்து மூலமாக அதற்கான கோரிக்கையை முன் வைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கக் காலத்திலேயே 57,000 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது மேலும் 53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.