ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என மத்திய உள்துறை அரசு தெரிவித்துள்ளது.
7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் அவர்களை சிறை வைத்திருப்பது சட்டவிரோதமானது என தெரிவித்து நளினி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது, சட்டவிரோதமாக சிறையில் இருப்பதாக நளினி கூறுவதை ஏற்க முடியாது என வாதிட்ட மத்திய அரசு சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகசுவும் கூறியுள்ளார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.
தான் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்குமாறு தமிழக அமைச்சரவை கடந்த 2018 தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள போதும் அது தொடர்பில் ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை இதுபோன்ற பரிந்துரையை முன்வைத்தால் ஆளுநர் அதனை உடனடியாக சட்ட ரீதியாக அணுக வேண்டும் எனவும் அதற்கமைய தமது கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தி தான் உள்ளிட்ட எழுவரையும் விரைவில் விடுவிக்க உத்தரவிடுமாறு நளினி தனது ஆட்கொணர்வு மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகளான ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.