தமிழ் திரைப்படத்துறையை எதிரி போல பார்க்கும் நிலை உருவாகிவிட்டது என்று, பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு தளத்தில் நேற்று மாலை பாஜக கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு உருவானது. அவர்களுக்கு எதிராக விஜய் ரசிகர்களும் போட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அவர்களைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினார்கள்.
இந்தப் போராட்டம் தொடர்பாக பெஃப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் பாஜக நடத்திய போராட்டத்தால் பெப்சி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த மாதிரியான போராட்டத்தால் திரைப்படத் துறையில் பெரிய அளவில் பிரச்சினை வரவிருப்பதாகத் தெரிகிறது.
இது போன்ற போராட்டத்தை பெஃப்சி அமைப்பு கண்டிக்கிறது. இந்த மாதிரியான போராட்டங்களால், தமிழ்நாட்டுக்கு வெளியே படப்பிடிப்பைக் கொண்டு போய்விடுகிறார்கள். 25 ஆண்டுகளுக்கு முன்பு ‘அரவிந்தன்’ படத்தின் படப்பிடிப்பில் ஒருவர் காயமடைந்தார், எப்போது வந்து தகராறு பண்ணுவது? இதில் என்ன நியாயம் இருக்கிறது.
அரவிந்தன் படத்துக்குப் பிறகு 16 படங்களின் படப்பிடிப்பு அங்கு நடந்துள்ளது. அப்போது எல்லாம் பண்ணாதவர்கள் இப்போது பண்ணுவது ஏன்? பெரிய ஹீரோக்களில் விஜய் படம் மட்டும் தான் தமிழ்நாட்டில் நடக்கிறது. ரஜினி, அஜித் உள்ளிட்டோர் நமக்கு ஏன் பிரச்சினை என்று வெளிமாநிலத்துக்கு ஷுட்டிங்கை மாற்றி விடுகிறார்கள்.
சமீபத்தில் அஜித் சார் படத்தோட ஷுட்டிங்கிற்காக தேனியில் உள்ள கோயிலை அங்கு செட் போட்டு படமாக்கியுள்ளனர். அங்கு ஒரு நாளைக்கு 2000 பேர் வரை பணிபுரிகிறார்கள். ஏன் போகிறார்கள் என்றால் இங்கு தொந்தரவு வரும் என்பது தான் காரணம்.
அதே படம் தேனியில் மட்டும் நடந்திருந்தால் குறைந்தபட்சம் 10 கோடி ரூபாய் தேனி மக்களுக்குக் கிடைத்திருக்கும். சென்னையில் நடந்தால் தொழிலாளர்கள் சம்பளம் மட்டும் 2 கோடி ரூபாய் வரை வந்திருக்கும். இப்போது ஒட்டுமொத்தமாகப் போனது யாரால், இப்படிப்பட்ட முறையற்ற போராட்டத்தால் தமிழ் சினிமாவைத் துரத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
இதனால் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய 1000 கோடி ரூபாய் வருமானம் வெளியே போய்விடுகிறது. தமிழ் சினிமாவை அரசியல் காழ்ப்புணர்ச்சி பாதிக்கிறது. தமிழ் சினிமா சிறிய பிரச்சனையில் இருந்து பெரிய பிரச்சினை நோக்கி செல்கிறது.
பொய் கணக்கு மூலம் திரைத்துறையை பெரிய துறையாக மாற்ற முயற்சி நடக்கிறது. கட்டுப்பாடு இல்லாத துறையாக திரைப்படத்துறை மாறிவிட்டது. எனவே, திரைப்படத்துறை மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். டிக்கெட் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்