நீங்கள் விரும்பிய படியே எனது அரசியல் பயணம் தொடரும். என்னை நம்பிய எனது மக்களுடன் இறுதிவரை வாழ்ந்து அவர்களுக்காக பணி செய்வது என்று முடிவுசெய்துள்ளேன் என தமிழ் மக்கள் தேசீயக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
´தமிழ் மக்கள் தேசீயக் கூட்டணி´யின் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் பூர்வாங்கக் கூட்டம் இன்று (09) காலை 10 மணிக்கு யாழ் டில்கோ ஹோட்டலில் சி.வி விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, கருத்து தெரிவித்த அவர்,
உங்கள் நீண்டகால எதிர்பார்ப்பான மாற்று அணி உருவாகிவிட்டது. எமது புரிந்துணர்வு உடன்படிக்கை என தருமை மக்களான உங்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பலமானதொரு கூட்டணி பரிணமித்துள்ளது.
ஒரு சில தனி நபர்களின் விருப்பு, வெறுப்புக்கள், பதவி மோகங்களுக்கு அப்பால் தமிழ் தேசிய அரசியலை கொள்கை அடிப்படையில் நிறுவனமயப்படுத்தி அகத்திலும் புலத்திலும் உள்ள சாதாரண மக்கள் முதல் புத்திஜீவிகள் வரை அனைவரையும் உள்வாங்கி முன்னெடுத்து செல்வதற்கு மாற்று அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்ற ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு மக்களினதும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நீண்ட பயணத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நன்னாளாக இன்றைய நாள் அமைகின்றது.
இதனை சீரிய முறையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பணி உங்கள் அனைவரையும் சாரும். குறிப்பாக இளையோர்கள் கைகளில் இது தங்கியுள்ளது.
நான் முதலமைச்சராக இருந்து தமிழ்த் தேசீய கூட்டமைப்பின் தலைமையுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த போதே, எனது தலைமையில் மாற்று அணி ஒன்றை உருவாக்கும் எதிர்பார்ப்புக்கள் மக்கள் மத்தியில் மட்டுமன்றி தமிழ் தேசீய கூட்டமைப்பில் இருந்து கொள்கை முரண்பாடு காரணமாக விலகி தனித் தனியாக செயற்பட்டு வந்த கட்சிகள் மத்தியிலும் ஏற்பட்டிருந்தன. இதன் அடிப்படையில் தான் நான் தமிழ் மக்கள் கூட்டணியை 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 24 அன்று உருவாக்கி இருந்தேன்.
அன்றைய தினம் ´தமிழ் மக்கள் கூட்டணி´ என்ற கட்சியை ஆரம்பிக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டு நான் ஆற்றிய உரையில், ´அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து தமிழ் தேசீய கோட்பாடுகளின்பால் பற்றுறுதியுடன் இருக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாட்டை முன்னெடுக்குந் தெரிவு சிறந்ததும் அவசியமானதும் என்று உணர்கின்றேன். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் பல தமிழ் புத்திஜீவிகளும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களும் ´இது காலத்தின் அவசியம் என்றும் எனது கடமை என்றும் உணர்த்தியுள்ளதுடன் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
எல்லாவவற்றுக்கும் மேலாக, நான் சந்தித்த ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இந்தக் கோரிக்கையைத் தான் என்னிடம் விடுத்து வந்திருக்கின்றார்கள். நீங்கள் விரும்பிய படியே எனது அரசியல் பயணம் தொடரும். என்னை நம்பிய எனது மக்களுடன் இறுதிவரை வாழ்ந்து அவர்களுக்காக பணி செய்வது என்று முடிவுசெய்துள்ளேன்´என்று குறிப்பிட்டிருந்தேன்.
அன்று முதல் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமையில் மாற்று அணி எப்போது உருவாகும் என்பதே வடக்கு கிழக்கில் உள்ள எல்லா மக்களினதும், புத்திஜீவிகளினதும், பொது அமைப்புக்களினதும், ஊடகங்களினதும் எதிர்பார்ப்பாக இருந்துவந்திருக்கின்றது.
எப்போது வரும் என்று ஊடகங்கள் கேட்டபோது மக்களே அதைத் தீர்மானிப்பார்கள் என்று பதில் இறுத்துள்ளேன். மக்களின் முடிவு இன்று அரங்கேறுகின்றது.
வெறுமனே தேர்தலை வெற்றிகொள்ளும் நோக்கத்துடன் இந்த கூட்டணியை நான் அமைக்கவில்லை. பதவியும் சலுகைகளும் முக்கியம் என்று நான் நினைத்திருந்தால் தமிழ்த்; தேசீயக் கூட்டமைப்புடனேயே ஒட்டிக்கொண்டிருந்திருப்பேன் அல்லது ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கோரி கௌரவ மகிந்த ராஜபக்ஸ அவர்கள் ஆசை வார்த்தைகளுடன் தமது முகவர்களை அனுப்பியபோது சோரம் போயிருப்பேன் அல்லது பிரிந்து சென்ற அனைவரும் மீண்டும் வாருங்கள் என்று அண்மையில் தமிழ்த் தேசீயக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கோரிக்கை விடுத்தபோதும் ´ஒற்றுமை´ என்ற வார்த்தையை பயன்படுத்தி மீண்டும் அவர்களுடன் இணைந்திருப்பேன். பதவிகளும் சலுகைகளும் எனது நோக்கமல்ல.
தமிழ் மக்கள் கூட்டணியை அறிவித்து 2018 ஒக்டோபர் 24 ஆம் திகதி ஆற்றிய உரையின் இறுதியில் பின்வறுமாறு குறிப்பிட்டிருந்தேன்.
´மக்கள் தந்த ஆணைதான் எனது மனசாட்சியாக இதுவரை இருந்துவந்துள்ளது. அவர்கள் அளித்த வாக்குகள் தான் என் சக்தி. நம்பிக்கையுடன் வாக்களித்த மக்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ என்னால் துரோகம் செய்ய முடியாது. இதனை என் பலம் என்பர் சிலர். சிலர் பலவீனம் என்பர். இது பலமா பலவீனமா என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும்.ஒருபோதும் மக்கள் எனக்கு அளிக்கும் ஆணைக்கு விரோதமாக நடக்கமாட்டேன். மக்களின் ஆணைக்கு விரோதமாக நடந்துவிட்டு அதற்கு சாணக்கியம் என்றும் ராஜதந்திரம் என்றும் முகமூடிகளை அணிந்துகொள்ளமாட்டேன். எமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்´ என்று கூறியிருந்தேன்.
இதன்படி, தமிழ் இனத்தின் வரலாறுதான் எனது அரசியலை வழிகாட்டி வருகிறது. இலங்கை பௌத்த நாடு என்று சிங்கள தலைவர்கள் அப்பட்டமாக பொய் கூறியபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களைப்போல அரசுடனான எமது உறவு பாதிக்கும் என்றோ அல்லது சிங்கள நண்பர்கள் பகைத்துக்கொள்வார்கள் என்றோ சிங்கள அரசியல்வாதிகளுடன் எப்படி பாராளுமன்றத்தில் தொடர்ந்து கூடிப்பழகுவது என்று நினைத்தோ ´சாணக்கியம்´ என்ற சொல்லின் பின்னால் ஒளிந்துநின்று பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த எமது தமிழ் இனத்தின் வரலாற்றைக் காட்டிக்கொடுக்கும் வகையில் நான் மௌனியாக இருந்ததில்லை.
நடந்தது இனப்படுகொலை தான் என்று கூறுவதற்கோ அல்லது சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டும் என்று வலியுறுத்துவதற்கோ நான் இரு தடவை யோசித்திருந்ததில்லை.சட்டம் எனக்கு அப்போது வழிகாட்டியது.
நல்லாட்சி அரசாங்கத்துக்கு எந்தப் பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காகவும், அரசுடனான தமது உறவு கெட்டுப்போகக்கூடாது என்பதற்காகவும் அவர்கள் காலத்தில் வராத ஒரு தீர்வுக்காகவும் விட்டுக்கொடுப்பு, நெகிழ்வுத்தன்மை, ராஜதந்திரம் என்ற வார்த்தைகளின் பெயரில், தமிழ்த் தேசீயக் கூட்டமைப்பு ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டமை, பௌத்த மதத்துக்கு முன்னுரிமையை ஏற்றுக்கொண்டமை, வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியம் இல்லை என்று ஒத்துக்கொண்டமை,வட்டுக்கோட்டை தீர்மானத்தைகைவிட்டமை, முள்ளிவாய்காலில் நடந்தது இன அழிப்பு அல்ல என்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பரப்புரை செய்தமை, சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்று கூறியமையே சிங்கள தலைவர்கள் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்றும் பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பாத ஒரு தீர்வினை சிறுபான்மை மக்கள் கேட்கக்கூடாது என்று துணிச்சலாக வெளியிடும் நிலைமையை இன்று ஏற்படுத்தி இருக்கின்றது.
இன்று இருக்கும் எல்லாத் தமிழ் தலைவர்களை விடவும் சிங்கள நண்பர்களும், புத்திஜீவிகளும், அரசியல்வாதிகளும், உறவினர்களும் எனக்கு அதிகம்.
ஆனால், அவர்களுடனான எனது உறவு விரிசல் அடையும் என்றோ, சிங்கள பெண்களை மணம்புரிந்த எனது மகன்மாருக்;கு அசௌகரியம் ஏற்படும் என்றோ நினைத்து நான் செயற்பட்டிருந்தால் இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்களே என்றும், தமிழில் இருந்துதான் சிங்கள மொழி பிற்காலத்தில் தோன்றியது என்றும் இலங்கை ஒரு சைவ நாடு என்றும் தமிழர்கள் பிரிந்து செல்வதற்கு உரித்துடையவர்கள் என்றும் திரும்ப திரும்ப கூறிக்கொண்டிருக்க மாட்டேன். ஆகவே வரலாறு தான் என்னை வழிகாட்டிவருகின்றது.
எனது அன்புக்குப் பாத்திரமான எனது தமிழ் இனத்தின் வரலாற்றை காட்டிக்கொடுத்து ஒருபோதும் சாபத்தை நான் தேடிக்கொள்ள மாட்டேன்.
எனது பின்புலத்தின் அடிப்படையில் எனது வார்த்தைகளின் சக்தி என்ன என்பதை மதிப்பீடு செய்தே சிங்களத் தலைவர்களுடன் நான் வார்த்தைகளால் மோதிக்கொண்டிருக்கின்றேன். எனக்கு எவர் மீதும் வெறுப்போ வைர்யமோ பயமோ இல்லை.
அரசியலில் வார்த்தைகள்மிகவும் பலம்மிக்கவை. அதனால்தான் வார்த்தைகளினாலும் கருத்துவினைப்பாடுகளினாலும் மோதி தத்தமது அடையாளத்தை நிறுவிக்கொள்வது சர்வதேச அரசியலிலும் சரி உள்நாட்டு அரசியலிலும் சரி அடிப்படையாக காணப்படுகின்றது. இதனால் தான் அரசியலில் ஊடகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 2001 ஆம் ஆண்டு ஆற்றிய ஒரு உரையில் பின்வருமாறு கூறியிருந்தார். ´நீ தேவதைகளின் பக்கம் நிற்கின்றாயா அல்லது பேய்களின் பக்கம் நிற்கின்றாயா என்பது முக்கியம் அல்ல.
சர்வதேசபரப்பில் பொதுக்கருத்துக்காகப் போட்டிபோடும் எவரும் தனது செயலை நியாயப்படுத்த வேண்டும். ஹிட்லர் தனது செயலை நியாயப்படுத்தினான்.
ஸ்டாலின் தனது செயலை நியாயப்படுத்தினான். அவர்கள் அனைவரிடமும் பரப்புரை இயந்திரங்கள் இருந்தன. நீ சரியோ பிழையோ உனது செயலை நீ நியாயப்படுத்த வேண்டும்´ என்றார். முள்ளிவாய்க்காலில் சிங்களத் தலைவர்கள் பயன்படுத்திய உத்தி இதுதான்.
தமிழ் மக்களின் போராட்டதைப் பயங்கரவாதமாக முத்திரை குத்தி சர்வதேச நாடுகளின் ஆதரவை பெறுவதற்கும் சிங்கள மக்களின் ஆதரவை பெறுவதற்கும் சிங்கள தலைவர்கள் பயன்படுத்திய உத்தி இதுதான்.
இன்றும் எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்பு சார்ந்த கலாசாரம் சார்ந்த இனஅழிப்பின் பின்னணியில் உள்ள உத்தியும் இதுதான்.
இலங்கை ஒற்றை ஆட்சி என்று சொல்லப்படுவதும், இலங்கை பௌத்த நாடு என்று சொல்லப்படுவதும், சிங்களவர்கள் இலங்கையின் தேசிய இனம் என்று சொல்லப்படுவதும், சிங்களம் இலங்கையின் தேசிய மொழி என்று சொல்லப்படுவதும் வெறும் பதவி மோக அரசியல் வார்த்தைகள் அல்ல.
அவை, தமிழ் மக்களுக்கு எதிரான அழிப்பு நடவடிக்கைகளின் உபாயங்கள்; வாய்வழி வந்தநியாயப்படுத்தல்கள். ஆகவேதான் இவற்றுக்கு எதிராக மௌனிகளாக இருக்காமல் சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் அரசியல் ரீதியாக, ஆய்வு ரீதியாக, ஊடக ரீதியாக நாம் போராடவேண்டும்.
நிறுவனமயப்படுத்தப்பட்ட அரசியல் ஒன்றின் ஊடாகவே நாம் இதனை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லமுடியும்.
ஆயிரம் சிந்தனை மையங்களும், அபிவிருத்தி நிறுவனங்களும், பண்பாட்டு நிலையங்களும் உலகம் முழுவதிலும் பரந்துவாழும் எம்மக்கள் மத்தியில் மலரவேண்டும்.
அதேநேரம் அரசியல் நடவடிக்கைகள் தங்கு தடையின்றி உணர்வுடனும் வேகமுடனும் கொண்டு செல்லப்பட வேண்டும். கொடிய யுத்தத்தின் பின்னர் நாம் மிகவும் பலவீனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாம் தொடர்ந்தும் தனிக் கட்சிகளையோ.
தனி நபர்களையோ முதன்மைப்படுத்தி சிறு சிறு துண்டுகளாக உடைந்துநின்று எதனையுஞ் சாதிக்க முடியாது. கடந்த காலங்களில் நாம் எல்லோருந் தான் தவறுகள் இழைத்திருக்கின்றோம்.
எமது கசப்புணர்வுகளையும் நடந்து முடிந்தவற்றை பற்றியும் மீண்டும் மீண்டும் கூறி எம்மை நாமே பலவீனப்படுத்த இடமளிக்க முடியாது.
அகத்திலும் சரி புலத்திலும் சரி சொற்ப எண்ணிக்கையானோரே தமது நேரம், பணம், சக்தி, அதிகாரம் ஆகியவற்றை செலவுசெய்து அரசியல் செயற்பாடுகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுவருகின்றார்கள்.
ஆகவே, நாம் எமக்குள்ளே மீண்டும் மீண்டும் எதிரிகளை உருவாக்கி எமக்குள்ளேயே தொடர்ந்து மோதிக்கொண்டிருக்க முடியாது.
நெத்தன்யாகு கூறியதைப்போல, தனது இராணுவ வெற்றிக்கு எந்தளவு அரசியல் வெற்றி ஒன்று அவசியம் என்பதை உணர்ந்தே தம்பி பிரபாகரன் கசப்புணர்வுகளை மறந்து தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்று சேர்த்து தமிழ்த் தேசீயக் கூட்டமைப்பை உருவாக்கி இருந்தார்.
ஆனால், தமிழ்த் தேசீயக் கூட்டமைப்பு யுத்தத்தின் பின்னர் தவறான தலைமைகளிடம் சென்று தமிழ் மக்களின் அரசியலைச் சரணாகதி அரசியலாக மாற்றி ஒரு சிலரின் விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப செயற்பட்டுவரும் நிலையில், கொள்கை அடிப்படையில் மாற்று அரசியல் அணி ஒன்றின் உருவாக்கத்துக்கு எமது மக்களும் புத்திஜீவிகளும் இன்று அடித்தளம் இட்டுள்ளார்கள்.
அரசியலுக்காக வெற்றுத் தேசியம் பேசிக்கொண்டிருப்பதால் எந்த பயனும் இல்லை. எம் கண்முன்னே இன்று ஏற்பட்டிருக்கும் அபாயங்களை அலட்சியப்படுத்திவிட்டு எமது மக்களின் பாதுகாப்பை உதாசீனம்செய்துவிட்டு நாம் அரசியல் செய்ய முடியாது.
இன்று நான் இங்கு பேசிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் எமது நிலங்கள் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. நாம் இழக்கும் எந்த ஒரு அங்குல நிலத்தையும் மீண்டும் பெறுவது என்பது இலகுவான காரியம் அல்ல.
அம்பாறையிலும், மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும், முல்லைத்தீவிலும் நாம் நிரந்தரமாக இழந்துபோயுள்ள நிலங்கள் பல்லாயிரம் ஹெக்டேயர்கள் ஆகும்.
தற்போது நெடுங்கேணி, வவுனியா வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களில் வெற்றிடமாகியுள்ள பிரதேச செயலாளர்கள் பதவி வெற்றிடங்களுக்கு சிங்கள சகோதரர்களை நியமித்து ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்களுக்கு உட்பட்டிருக்கும் அந்தந்தப் பிரதேசங்களை துரிதமாக சிங்கள மயமாக்கும் செயற்பாடு ஒன்று திட்டமிடப்படுவதாக அறிகின்றேன்.
இலங்கையின் ஆதிக் குடிகள் நாங்கள், எம்மை நாமே ஆண்டவர்கள் நாம் என்ற அடிப்படையில் எமது தமிழ்த் தேசீய அரசியல் அபிலாiஷகள் எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு அசுர வேகத்தில் எமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனஅழிப்பு நடவடிக்கைகளில்இருந்து எமது இருப்பு, அடையாளம் என்பவற்றை பாதுகாப்பதற்கான தந்திரோபாயமான தடுப்பு அரசியலும் எமக்கு அவசியமாகின்றன.
ஆகவே, நீண்ட கால அடிப்படையிலும் குறுகியகால அடிப்படையிலும் திட்டங்களை வகுத்து நாம் செயற்படவேண்டும். இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டே மிகுந்த நம்பிக்கையுடன் இந்தப் பயணத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்.
அரசியல் சுக போகங்கள், சலுகைகளுக்காக இந்தக் கூட்டணி துஷ;பிரயோகம் செய்யப்படுவதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். அதற்கு ஏற்ற வகையிலேயே பல்வேறு கட்டுப்பாடுகள், இறுக்கங்களை இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஏற்படுத்தி இருக்கின்றோம்.
எழுந்தமானதாக எவையும் இங்கே மேற்கொள்ளப்படவில்லை.திட்டமிடப்பட்ட அடிப்படையிலேயே கூட்டணிக்கான முயற்சிகள் நடைபெற்றுள்ளன.
அகத்திலும் புலத்திலும் உள்ள மக்களை ஒன்றுபடுத்தி தமிழ் அரசியலை நிறுவனமயப்படுத்தி முன்னெடுத்து செல்வதற்காக 2018 ஒக்டோபர் 24 அன்று எமது உரையில் கூறிய 10 செயற்திட்ட அம்சங்களும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில்எமது ´செயற்பாடுகள்´ என்ற பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன.
இளையோர்கள், பெண்களுக்கான முக்கியத்துவம், பதவி துஷ;ப்பிரயோகம், முறைகேடான சொத்து சேர்ப்பு, ஊழல் தடுப்பு ஆகியவை குறித்து இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணியில் வேட்பாளர்களாக நிறுத்தப்படுபவர்கள்இப்புரிந்துணர்வு உடன்படிக்கையின் ஏற்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு செயற்படுவார்கள்.
புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு ஏற்ப கூட்டணியின் ஏனைய கட்சிகளும் இவற்றை கடைப்பிடிப்பார்கள் என்று நம்புகின்றேன். தமிழ் அரசியலை உயர்ந்த ஒரு நிலையை நோக்கி கொண்டு செல்வதற்காக தேசிய கூட்டணியின் கீழ் எந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரும் தமது சொத்துக்கள் மற்றும் வருமானங்களை வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக வெளிப்படுத்துவது ஊக்குவிக்கப்படுகின்றது.
வேட்பாளர் தெரிவு, பொறுப்புக்கள் மற்றும் பதவிகள் நியமனம் ஆகியவற்றின்போது இந்த விடயம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று எமது உடன்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல, இந்த பாராளுமன்றத்துக்கு தெரிவாகும் வேட்பாளர்கள் தத்தமது மாதாந்த படிகளின்8 சதவீதத்தினை பொதுமக்களின் நல்வாழ்வு திட்டங்களுக்காக இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அவர்கள் விரும்பிய ஒரு அறக்கட்டளை நிதியத்துக்கு மாதாந்தம் வழங்க வேண்டும்.
இது பற்றிய அறிவித்தல், விபரங்களுடன் தேசியக் கூட்டணிக்கு வழங்கப்பட வேண்டும்.
அது எமது தமிழ் மக்கள் நம்பிக்கைப் பொறுப்பு நிதியமாகவும் அமையலாம்.
அதேவேளை ஆகக்குறைந்தது 2 சதவீதத்தினை தேசிய கூட்டணியின் பொதுவான செலவீனங்களுக்காக வழங்கவேண்டும்.
இளையோர்களையும் புதியவர்களையும் அரசியலுக்குள் உள்வாங்கும் பொருட்டு ஒவ்வொரு தேர்தல்களிலும் ஆகக்குறைந்தது 10சதவீதம் அவர்களுக்காக இடம் ஒதுக்கப்படவேண்டும்.
இதனை எனது கட்சி உறுதிப்படுத்தும். அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படும் வகையில் தேர்தல்களின் பெண் வேட்பாளர்களை முடிந்தளவு நிறுத்துவதற்கு அங்கத்துவ கட்சிகள் பிரயத்தனம் செய்யவேண்டும்.
ஆண்: பெண் பிரதிநிதித்துவம் 50:50 என்ற விகிதாசாரத்தில் நாளடைவில் ஏற்படும் வகையில் நாம் முயற்சி எடுப்போம். பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படும் ஒருவர் மீது ஆதாரபூர்வமாக நம்பகத்தன்மையான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால் முறையான விசாரணை நடைபெறும் வரை அவர் தனக்கு வழங்கப்பட்ட நியமன ரீதியான பதவியில் இருந்து தற்காலிகமாக விலகிக்கொள்ளவேண்டும்.
இதற்கான ஆவணங்களில் கையொப்பம் இட்ட பின்னரே அவர் தமது பதவியை ஏற்றுக்கொள்ளலாம்.
தேர்தல்களில் வெற்றிபெறுபவர்கள் தமது அதிகாரத்தை தமது சொந்த பந்தங்களுக்காக துஷ;பிரயோகம் செய்யக்கூடாது. திறமை, தகுதி மற்றும் யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே வேலைவாய்ப்பு கொடுக்கப்படவேண்டும்.
கூட்டணி அமைத்துள்ள கட்சிகளுடனும் அவற்றின் உறுப்பினர்களுடனும் கடந்த சில வருடங்களாக கொள்கை அடிப்படையில் ஏற்கனவே நான் செயற்பட்டு வருகின்றேன்.
அநேகமானவர்கள் தமிழ் மக்கள் பேரவையிலும் இருக்கின்றார்கள். தமிழ்த்தேசீயக் கூட்டமைப்பில் ஆரம்ப காலம் முதல் செயற்பட்டுவந்த நுPசுடுகு கட்சி கொள்கை காரணமாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பல வருடங்களாக தனியாக செயற்பட்டுவந்திருக்கின்றது.
கூட்டமைப்பின் தலைவர்கள் ஜெனீவா சென்று அரசாங்கத்தை காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்து கொண்டு துணிச்சலாக எதிர்ப்பு காட்டியவர் சுரேஷ; பிரேமச்சந்திரன்.
அதேபோல,வுநுடுழு அமைப்பில் அங்கம் வகித்து கூட்டமைப்பின் செயற்பாடுகளை உள்ளுக்குள் இருந்துகொண்டு எதிர்ப்புவெளியிட்டு வந்தவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.ஸ்ரீகாந்தா மற்றும் திரு.சிவாஜிலிங்கம் ஆகியோர்.
அவர்களுடன் நான் கடந்த காலங்களில் இணைந்து பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றேன். அதேபோல,திருமதி.அனந்தி சசிதரன் வட மாகாண சபையில் அமைச்சராக என்னுடன் இணைந்து பணியாற்றியுளார்.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அச்சம் இன்றி அவர் வெளியிட்ட கருத்துக்கள் அரசாங்கத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தியமையால் தமிழரசு கட்சியில் இருந்து அவர் வெளியேறும் நிலை ஏற்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நான் முதலமைச்சராக இருந்தபோது எனது கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே நான் செயற்படவேண்டிய நிலை இருந்தது. எமது மக்களின் உரிமைகள் பற்றி நான் கதைப்பதையோ அரசாங்கத்தை விமர்ச்சிப்பதையோ கூட்டமைப்பின் தலைமை விரும்பவில்லை.
அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் பல முட்டுக்கட்டைகளை இட்டது. நான் இப்போது சுயாதீனமாக செயற்படுகிறேன். நான் ஒரு நிறுவனமாகவே செயற்படுகின்றேன். அகத்திலும் புலத்திலும் பல புத்திஜீவிகளும் செயற்பாட்டாளர்களும் எனக்கு ஆதரவு வழங்குகின்றார்கள்.
முடிந்தளவுக்கு தமிழ் அரசியல் செயற்பாடுகளை நிறுவன மயப்படுத்தி அறிவுபூர்வமான முறையில் முன்னெடுத்து செல்வதற்கான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும். மகாவம்ச புனைகதைகளுக்கு எதிராக தமிழின், தமிழர்களின் உண்மையான வரலாற்றை உரத்து கூறுவதற்கு நாம்அஞ்சத் தேவையில்லை.
பிரித்தானியர்களிடம் இருந்து இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த நாள் முதல் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் பல்வேறு வழிகளிலும் தியாகங்களை மேற்கொண்டு தமது உயிர்களை அர்ப்பணித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் போராளிகளை நன்றியுடன் நினைவுகூர்ந்து அவர்களின் உயரிய சிந்தனைகளை மனதில் நிறுத்தி இந்த உரையை இத்துடன் நிறைவுசெய்கின்றேன் என்றார்.
-யாழ். நிருபர் பிரதீபன்-