நெய்வேலியில் என்எல்சி முன்பு கூடியிருந்த ரசிகர்களை நோக்கி கையசைத்து, நடிகர் விஜய் செல்ஃபி எடுத்தார்.
நடிகர் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ சினிமா படப்பிடிப்பு நெய்வேலியில் உள்ள என்.எல்.சி சுரங்கப்பகுதியில் நடந்து வருகிறது. இதனிடையே வருமானவரித்துறையினர் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை சென்னை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதன் பின்னர் விஜய் மீண்டும் நேற்று முன்தினம் மாஸ்டர் படப்பிடிப்பில் பங்கேற்றார்.
இந்த படப்பிடிப்புக்கு பாரதீய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாதுகாக்கப்பட்ட இடமான என்.எல்.சி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த என்.எல்.சி சுரங்க நிர்வாகம் எப்படி அனுமதி அளித்தது என்று கூறி போராட்டம் செய்தனர்.
இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் திரண்டு வந்து பாரதீய ஜனதா கட்சியினருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டம் செய்த பாஜகவினரை சமரசம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
நேற்று காலை 9 . 1 5 மணியளவில் விஜய் காரில் 2வது சுரங்க வாயில் வழியாக படப்பிடிப்பு தளத்துக்கு சென்றார். இதனை அறிந்த ரசிகர்கள் திரண்டனர். பின்னர் மாலை படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த விஜய் காரை ரசிகர்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். அதன்பின்னர் விஜய் கார் புறப்பட்டு சென்றது.
இன்று 4-வது நாளாக மாஸ்டர் படப்பிடிப்பு நடந்தது. இதற்காக விஜய் புதுச்சேரியிலிருந்து காரில் இன்று காலை 9.30 மணிக்கு வந்தார். என்.எல்.சி. 2-வது சுரங்க நுழைவாயில் பகுதி வழியாக அவரது கார் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு சென்றது.
அங்கு விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பு நடை பெறும் இடத்தில் என்.எல்.சி. தொழிலாளர்கள் மற்றும் வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கப்படவில்லை.
படப்பிடிப்பு குழுவினர், டெக்னீஷியன்கள் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
இதற்காக அவர்களுக்கு அடையாள அட்டையை என்.எல்.சி நிர்வாகம் வழங்கி உள்ளது. இந்த படப்பிடிப்பு வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும். மந்தாரக்குப்பம் போலீசாரும் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் விஜய்யை காண என்.எல்.சி முன்பு ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். படபிடிப்பு முடிந்து வெளியே வந்த நடிகர் விஜய்யை பார்த்து ரசிகர்கள் உற்சாகமாக கையசைத்தனர்.
உடனே வேன் மீது ஏறி நின்று ரசிகர்களை நோக்கி கையசைத்து நடிகர் விஜய் செல்ஃபி எடுத்தார். அதன் பிறகு காரில் ஏரி சென்றார். விஜய்யை நேரில் காண ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.