ஆஸ்கார் விருதுகள் ஜோக்குயின் பீனிக்ஸ், சிறந்த நடிகை ரெனீ ஜெல்வெஜெர்

92வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகர் விருது ஜோக்கர் படத்தில் நடித்த ஜோக்குயின் பீனிக்சுக்கு வழங்கப்பட்டது.

சர்வதேச அளவில் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறுவதற்காக உலகில் உள்ள அனைத்து மொழி படங்களும் போட்டியிடும்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா இன்று தொடங்கியது. இதில் சிறந்த துணை நடிகருக்கான விருது முதலில் அறிவிக்கப்பட்டது. ‘ஒன்ஸ் அபான் எ டைம்… இன் ஹாலிவுட்’ என்ற படத்தில் நடித்த நடிகர் பிராட் பிட் சிறந்த துணை நடிகருக்கான விருது வென்றார். இதேபோன்று மேரேஜ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்த லாரா டெர்ன் சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றார்.

ஜோக்கர் (JOKER) படத்தில் நடித்த ஜோக்குயின் பீனிக்ஸ் சிறந்த நடிகருக்கான விருது வென்றார். இதேபோன்று ஜூடி (JUDY) படத்தில் நடித்த ரெனீ ஜெல்வெஜெர் சிறந்த நடிகைக்கான விருது வென்றுள்ளார்.

சிறந்த படம் பாராசைட் (PARASITE) தேர்வு செய்யப்பட்டது. சிறந்த இயக்குனர் விருது இதே படத்திற்காக போங் ஜூன்-ஹோ வென்றுள்ளார். இவற்றில் பாராசைட் படத்திற்கு சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குனர் ஆகிய 3 விருதுகள் கிடைத்துள்ளன.

Related posts