தமிழ் மக்களது மரபுவழி தாயகமான இணைந்த வடக்கு கிழக்கில் உயர்ந்தமட்ட சுயாட்சியை சமஷ்டி அடிப்படையில் பெற்றுக்கொடுக்கும் வகையில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்ற பெயரில் புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
இப் புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்பட்டது. இதில் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ், சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி மற்றும் அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்துள்ளன.
இந்நிலையில் இக் கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்த கைச்சாத்தை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கூட்டணியின் தலைவர் சீ.வீ.விக்கினேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,
சீ.வீ.விக்கினேஸ்வரன்
தமிழ் மக்கள் தமது மரபுவழி தாயகமான இணைந்த வடக்கு கிழக்கில் உயர்ந்த மட்ட சுயாட்சியை சமஷ்டி அடிப்படையில் வாழ்வதற்குரிய நிலைமையை பெற்றுக்கொடுப்பதே இப் புதிய கூட்டணியின் நோக்கமாகும்.
அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் கொடுத்த ஆணைக்கு மாறாக செயற்பட்ட நிலையிலேயே இப் புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டப்படி தமிழ் மக்கள் ஒரு தேசம், இலங்கையின் வடக்கு, கிழக்கு அவர்களின் மரபுவழி தாயகம் அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்று தமிழ் மக்கள் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஆணை வழங்கினர்.
அதனை ஏற்று மற்றும் பூகோள அரசியல் மாற்றங்களுக்கு அமைவாக சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி இறுதியாக 2012ல் கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் 2013ல் வடக்கு மாகாண சபை தேர்தலிலும் தமிழ் மக்கள் மீண்டும் ஆணை வழங்கினர்.
ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கைத் தீவினுள் தமிழர்களின் மரபுவழி தாயகமான இணைந்த வடக்கு கிழக்கில் இறைமையுடனான உயர்ந்த மட்ட சுயாட்சியை சமஷ்டி அடிப்படையில் பெறுவதற்கும் அவர்களின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு மேம்பாட்டுக்குமாக அனைத்து ஜனநாயக வழிகளையும் வாய்ப்புக்களையும் பயன்படுத்துவதற்கான பலமான கூட்டணியாக இக் கூட்டணி செயற்படும்.
சுரேஸ்பிரேமச்சந்திரன்
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாற்றுத் தலைமையானது தமிழ் மக்களுக்கு சரியான பாதையை வகுத்து கொடுக்கும். நாம் சரியான பாதையில் பயணித்து தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்போம். எனவே ஐக்கியம் பேசுகின்ற யாரும் எம்முடன் இணைந்து பயணிக்கலாம்.
தமிழ் மக்களின் இன விடுதலைக்காக பல தரப்புக்கள் போராடியுள்ளனர். தங்களின் உயிர்களை பொருட்படுத்தாது போராடிய அனைவரையும் எமது கூட்டணியில் இணையுமாறு இந்த சந்தர்ப்பத்திலே அழைப்பு விடுக்கின்றேன். எமது கூட்டணி அமைக்கப்பட்டதன் நோக்கம் தமிழ் மக்கள் இத்தனை ஆண்டுகளாக கோரி வந்த இனப் பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்கேயாகும்.
எனவே தற்போது எமக்கு எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். தமிழரின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும். ஆகிய அடிப்படையான விடயங்களில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
ஆகவே வெளியில் நின்று வெறுமனே ஐக்கியத்தை பேசுவதை விட நாங்கள் ஒன்றாக சேர்ந்து செயற்பட வேண்டும். சிங்கள பௌத்த அரசு எதுவாக இருந்தாலும் அவர்களை பாதுகாப்பதை விடுத்து இன்று இருக்கக் கூடிய அக புற சூழ்நிலைகள் அனைத்தயும் கவனத்தில் எடுத்து நாம் எவ்வாறு செயற்பட வேண்டும். அதன் ஊடாக எவ்வாறு தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பது பற்றி சிந்திக்க வேண்டும் என்றார்.
சிறிகாந்தா
நாம் ஒரே இனம். ஒரே தேசம் என்ற உணர்வோடு தொடர்ந்து செயற்பட முடியுமாக இருந்தால் எதிர்வரும் ஒரு சில ஆண்டுகளுக்குள்ளே எமது மக்கள் கேட்டு நிற்கின்ற அரசியல் நீதியை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
அரசியல் ரீதியான எமது உரிமைக்கான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றே மாற்றுத்தலைமை உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கை தீவிலே கடந்த எழுபது வருடங்களாக தமிழ் மக்கள் தங்களின் உரிமைக்காக போராடி வருகின்றனர். அரசியல் ரீதியான எமது உரிமைக்கான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த நிலைப்பாட்டில் உறுதியுடன் இந்த புதிய கூட்டணி உதயமாகின்றது.
மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக நாம் இந்த கூட்டணியை உருவாக்கியுள்ளோம். இந்த கூட்டணி அதற்காக சரியான பாதையில் அர்ப்பணிப்புடன் பயணிக்கும்.
எமது பயணம் மிகவும் கடினமானது. எமக்கு முன்பாக உள்ள பாதை கறடு முரடானது. எமது மக்களின் எதிர்காலம் மிகவும் சவால்கள் நிறைந்ததாக காணப்படுகின்றது என்றார்.
அனந்தி சசிதரன்
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வடக்கு கிழக்கு மக்கள் சார்ந்த நலனில் அக்கறையுடன் சரியான பாதையில் பயணிக்கும். எமக்கான முழு ஆதரவினை மக்கள் தர வேண்டும்.
இலங்கையில் பெரும்பான்மை இனம் என்ற சிங்கள தேசத்தால் தமிழ் மக்களாகிய நாம் எமது உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றோம். எமது மக்களின் இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் முப்பது ஆண்டுகள் நடைபெற்றது. எனினும் எமது போராட்டம் சர்வதேசத்தின் உதவியுடன் கடந்த 2009ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்டது.
இதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு வழங்கிய ஆணையை மீறி செயற்பட்டு வருகின்றது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான் உட்பட பலர் வெளியேறி இருக்கின்றோம். நாம் இன்று மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்கியுள்ளோம். இந்த கூட்டணி வடக்கு கிழக்கு மக்கள் சார்ந்த நலனில் அக்கறையுடன் சரியான பாதையில் பயணிக்கும். எமக்கான முழு ஆதரவினை மக்கள் எமக்கு தர வேண்டும் என்றார்.
பருத்தித்துறை விசேட நிருபர்