இந்தியா-இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண பாக் நீரிணை-மன்னார் வளைகுடா கூட்டு கடல்சார் மீன்வள மேலாண்மை ஆணையம் அமைக்கவேண்டும் என்று இலங்கை மந்திரி டக்ளஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் இலங்கை மீன்வளத்துறை மந்திரி டக்ளஸ் தேவானந்தாவும் வந்தார். இந்தநிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசிய டக்ளஸ் தேவானந்தா இலங்கை மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து 19 பக்கங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை அவரிடம் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தா ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடல்சார் சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிப்பதை மிகவும் உணர்வுப்பூர்வமாக பார்க்கவேண்டும். தென்னிந்தியாவையும், இலங்கையின் வடக்கு மாகாண பகுதியையும் பிரிக்கும் பாக் நீரிணை-மன்னார் வளைகுடா பகுதியில் பல்வேறு தனித்துவமிக்க கடல் வளங்கள் உள்ளன.
இந்த பகுதியில் கடல்சார் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் ஊடுருவி மீன்பிடிப்பது இலங்கை வடக்கு மாகாண பகுதியில் உள்ள தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. ஈழப்போர் நடந்தபோது இலங்கையின் வடக்கு மாகாண பகுதியில் உள்ள தமிழ் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு அனுமதி கொடுக்கவில்லை.
போர் நிறைவடைந்த பின்னர், ஒரு வருடத்துக்கு பிறகு தான் அவர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இந்திய மீனவர்கள் ராட்சத படகுகள் மற்றும் ரெட்டை மடி வலைகள் மூலம் தங்களுக்கு கிடைக்க வேண்டிய மீன்களை சுருட்டிக்கொண்டு செல்வதோடு, வலைகளையும் சேதப்படுத்துவதாக இலங்கை தமிழ் மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால் இலங்கை தமிழ் மீனவர்கள் கோபம் அடைந்து, இந்திய மீனவர்களையும், அவர்களுடைய படகுகளையும் தாக்குகிறார்கள். மீனவர்களுக்கு இடையே ஏற்படும் மோதலை இலங்கை கடற்படை தடுக்கிறது. வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான மீன்வள திருத்த சட்டம் 2018 அமல்படுத்துவதற்கு முன்பு, 138 இந்திய மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து இதுவரை இந்திய கடலோர காவல்படை, இலங்கையை சேர்ந்த 34 மீன்பிடி படகுகளை பிடித்துள்ளது. அவற்றை விடுவிக்கவேண்டும்.
மேலும், அதிக பணம் ஈட்டுவதற்காக மீனவர்கள் போதைப்பொருள் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை 2 நாடுகளும் இணைந்து தடுக்கவேண்டும். மீனவர்களின் படகுகளை பயன்படுத்தி கடல் எல்லையை பயங்கரவாதிகள் கடந்து செல்வது வளர்ந்து வரும் அச்சுறுத்தல் ஆகும்.
மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா கூட்டு கடல்சார் மீன்வள மேலாண்மை ஆணையம் அமைக்கவேண்டும். இந்த ஆணையத்தில் 2 நாடுகளை சேர்ந்த மீன்வளத்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள், இலங்கை வடக்கு மாகாணம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகள் உள்பட 2 நாடுகளில் இருந்தும் தலா 7 உறுப்பினர்கள் இடம்பெறவேண்டும்.
ஆழ்கடல் மீன்பிடி படகுகளை பெறுவதிலும், தேவையான நிதி மற்றும் தளவாட ஆதரவை வழங்குவதிலும், இந்திய மீனவர்களுக்கு மோடியின் உத்தரவாதம் உதவிகரமாக இருக்கும். இதுதவிர பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் உள்ள மீனவ சமூகத்தினர் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதை வலுப்படுத்துவதன் மூலம் 2 நாட்டினரும் கூட்டாக இணைந்து மீன் பிடிப்பதை உற்சாகப்படுத்தமுடியும். இவ்வாறு அவர்