யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பகிடிவதை மற்றும் கைத்தொலைபேசி ஊடாக இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண சமூகம் என தம்மை அடையாளப்படுத்திய குழுவினர், யாழ். பல்கலைக்கழகம் முன்பாக இன்று(11) குறித்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
அதன்போது பகிடிவதைக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன் , பதாகைகளையும் கைகளில் ஏந்தி இருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள மகளிர் அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பாலியல் வன்முறை மற்றும் பகிடி வதைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தனர்
மகிழ்ச்சியான பல்கலைக்கழக வாழ்க்கையை மரணத்தில் முடிக்காதே, தற்கொலை சிந்தனையை தூண்டும் பகிடிவதை தேவைதானா, நாட்டிலும் வீட்டிலும் பெண்கள் சமத்துவத்தைப் பேணுவோம், பாலியல் கல்வி என்பது வாழ்க்கை பாடம் தயக்கத்தை விட்டு கற்றுக்கொள்வோம் போன்ற பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்தில் உள்ளுராட்சி சபைகளின் பெண் உறுப்பினர்களும் மகளிர் அமைப்புகளும் கலந்து கொண்டனர்.