துரித பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் வகையில் கல்வி முறை மாற்றப்பட வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
சுதேச மற்றும் சர்வதேச தொழிற்சந்தைக்கு பொருத்தமான வகையில் பல்கலைக்கழக கலைத்திட்டத்தை மறுசீரமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் உபவேந்தர்களுடன் அண்மையில் (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது பணிப்புரை விடுத்தார்.
உயர் கல்வித் தகைமையுடனும் நவீன தொழிநுட்பத்துடனும் முன்னோக்கிச் செல்லக்கூடிய தொழிற்படையொன்று எமது நாட்டில் உள்ளது. எளிமையான முறையினூடாக தொழிற்சந்தைக்கு பொருத்தமான முறையில் அவர்களை தகைமைப்படுத்தக்கூடிய இயலுமை எம்மிடம் உள்ளதென்பதை தான் உறுதியாக நம்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சுற்றுலாத்துறை, விவசாயத்துறை, பெருந்தோட்ட மற்றும் தொழிநுட்பத் துறையை அடிப்படையாகக்கொண்ட தொழில்களை உருவாக்குவதன்மூலம் நாட்டிற்கு துரித பொருளாதார அபிவிருத்தியை அடைந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். மருத்துவம், பொறியியல், தாதி மற்றும் தகவல் தொழிநுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெருமளவு தொழில் வாய்ப்புகள் உள்ளன. அதற்கு தகுதியானவர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்து உருவாகாது இருப்பது பாரிய பிரச்சினையாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு உயர் தரத்தில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கு மூன்றாம் நிலைக் கல்வி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். கலைத்துறை பட்டப் படிப்புடன் தகவல் தொழிநுட்பம் மற்றும் சர்வதேச மொழியை கற்பதற்கான வழிவகைகளை செய்வதன் மூலம் அடுத்த மூன்று வருடக்காலப் பகுதியில் துரித முன்னேற்றத்தை அடைந்து கொள்ளக்கூடியதாக இருக்குமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பாடசாலை முதல் பட்டப்படிப்பு வரை அனைத்து பிள்ளைகளுக்கும் தலைமைத்துவம் தொடர்பான அனுபவத்தையும் சவால்களை வெற்றிக்கொள்ளக்கூடிய இயலுமையையும் வழங்க வேண்டியது அவசியமாகும். அதற்காக பல்கலைக்கழக பாடநெறி தொழிற்சந்தைக்குப் பொருத்தமான வகையில் தயாரிக்கப்பட வேண்டும். இதன்போது அரசியல் குழுக்கள் அல்லது சிறியதொரு தரப்பிடமிருந்துவரும் எதிர்ப்புக்களை கருத்திற்கொள்ள வேண்டியதில்லை. நாட்டைக் காட்டிக்கொடுப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. நாட்டை சரியான திசைக்கு கொண்டு வருவதற்கு நேரடியாக செயற்படுங்கள் என்றும் ஜனாதிபதி உபவேந்தர்களிடம் கேட்டுக்கொண்டார்.
தேசிய கல்விக்கொள்கையொன்றை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அதற்குத் தேவையாயின் மக்கள் கருத்துக் கணிப்பொன்றுக்கும் செல்ல வேண்டுமென்றும் அத்தகைய நிலைமைகளில் அரசாங்கம் அல்லது அமைச்சர்கள் மாறுகின்றபோது கொள்கைகள் மாற்றமுறாது என்றும் சுட்டிக் காட்டினார்.