பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நெல்லூரில் இருக்கும் தனது பரம்பரை வீட்டைக் காஞ்சி மடத்துக்குத் தானமாக அளித்துள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இந்தியாவின் மிகப் பிரபலமான பாடகர்களில் ஒருவர். பல்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட 40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.
நெல்லூரில் எஸ்.பி.பி.க்குச் சொந்தமான பரம்பரை வீடு ஒன்று திப்பராஜுவாரி என்கிற தெருவில் உள்ளது. சென்னையில் எஸ்.பி.பி. எப்போதோ குடியேறி விட்டதால் அவரது நெல்லூர் வீடு பல காலமாகப் பூட்டியிருந்ததாகவே தெரிகிறது. இதை வாங்குவதற்காகப் பலர் முயன்றாலும் எஸ்.பி.பி. இதை யாருக்கும் விற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த வீட்டைக் காஞ்சி மடத்துக்குத் தானமாகக் கொடுக்கப்போவதாக எஸ்.பி.பி. ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதை தற்போது செயல்படுத்தியுள்ளார். காஞ்சி மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் தனது வீட்டை ஒப்படைத்த எஸ்.பி.பி. அதில் ஒரு சமஸ்கிருத வேதப் பாடசாலையை ஆரம்பிக்கவே இந்த தானத்தைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.