இந்தியா, புனே விமான நிலைய ஓடுதளத்தில் ஜீப் குறுக்கிட்டதால் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை டேக் ஆப் செய்து பறக்க செய்தார்.
புனே விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் ஏர் எந்தியா விமானம் காலை 180 பயணிகளுடன் புறப்பட்டது. அந்த விமானம் வானில் பறப்பதற்கு ஆயத்தமாக ஓடுதளத்தில் சுமார் 222 கி.மீ.,வேகத்தில் ஓடத் துவங்கியது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் ஓடுதளத்தின் குறுக்கே ஒரு மனிதர் மற்றும் ஜீப் ஒன்றை வேகமாக வருவதை விமானி கவனித்தார்.
இதனால் பதறி போன விமானி உடனடியாக விமானம் ஜீப்பின் மீது மோதிவிடாமல் இருப்பதற்காக அவசர, அவரசமாக செயல்பட்டு உடனடியாக விமானத்தை டேக் ஆப் செய்து பறக்க செய்தார். விமானியின் சாமர்த்திய செயல்பாடு காரணமாக, ஜீப்பின் மீது விமானம் மோதி ஏற்படவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமான பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் காரணமாக விமானத்தின் முன் அடிப்பகுதி சேதமடைந்தது. இருப்பினும் விமானம் தொடர்ந்து பறந்து, காலை 10.15 மணியளவில் டெல்லியில் பத்திரமாக தரையிறங்கியது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் விசாரணைக்காக அந்த ஏர் இந்தியா விமானம் சேவையில் இருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. சேதமடைந்த விமானம் வானில் பறக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.