ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பலவீனமான தலைவர் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
5 வருட ஆட்சிக்காலத்தில் ரணில் விக்ரமசிங்க அடிக்கல் ஒன்று கூட வைத்ததில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
—-
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீனை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரிப்கான் பதியுதீன் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று (17) ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை 25,000 ரூபா ரொக்கப்பிணை மற்றும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் இரகசிய பொலிஸார் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதுடன் அவருக்கு வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வழக்கை 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தலைமன்னார் பகுதியில் உள்ள 24 மில்லியன் பெறுமதியான 40 ஏக்கர் நிலம் ஒன்றிற்கு போலி உறுதிப்பத்திரம் தயாரித்து மோசடி செய்ததாக ரிப்கான் பதியுதீன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
—
எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதி நள்ளிரவு அல்லது அதற்கு அடுத்த நாள் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று அரசாங்க பேச்சாளரும் முதலீட்டு ஊக்குவிப்புக்கான இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி பாராளுமன்றத்தின் நான்கரை வருட காலத்தின் பின்னர் அதனை ஜனாதிபதியினால் கலைக்க முடியும்.
எனவே அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதி நள்ளிரவு பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலொன்றுக்கு செல்ல முடியும் என்று இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தினகரனுக்கு தெரிவித்தார். எவ்வாறெனினும், பாராளுமன்றம் கலைக்கப்படும் சரியான திகதி நாளை (18) செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள ஊடக மாநாட்டிலேயே அறிவிக்கப்படுமென்றும் அதற்கான இறுதித் திகதி இன்னும் முடிவு செய்யப்படவில்லையென்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
இதே வேளை இறுதி பாராளுமன்ற் அமர்வு நாளை முதல் 20 ஆம் தகதி வரை இடம்பெற உள்ளது.
இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரசாங்கத்துக்கு தீவிர போக்குடைய அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகளின் உதவியின்றி தனித்துப் போட்டியிட்டே பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியுமென இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக மாநாடொன்றின்போது குறிப்பிட்டார்.
எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படுமாயின் ஏப்ரல் மாத இறுதியில் பொதுத் தேர்தலை நடத்த முடியும் என்று அரச தரப்புகள் கூறுகின்றன. புதிதாக தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதில் அரசாங்கம் ஆர்வமாக உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஆரம்ப அடிப்படை வேலைகளை அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிக்கை ஏற்கனவே ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளது. ஜனாதிபதி அதில் தனது கையெழுத்தை வைத்தால் போதுமானது என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.
பாராளுமன்ற கலைப்புக்கு முன் எதிர்வரும் பெப்ரவரி 18 முதல் 20 ஆம் திகதி வரையிலான மூன்ற நாட்கள் பாராளுமன்றம் நடைபெறும்.அத்தினங்களில் மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பான தடயவியல் ஆய்வு அறிக்கை விவாதத்துக்கு எடுக்கப்படும். அதனையடுத்து எதிர்வரும் பெப்ரவரி 20 ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விவகாரம் தொடர்பான விவாதம் எடுத்துக்கொள்ளப்படும்.இது தவிர குறைநிரப்பு பிரேரணையும் சமர்ப்பிக்கப்பட உள்ளது குறிப்பிடத் தக்கது .
—–
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைக்கு தீர்வுகாணும் முகமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாட முடிவுசெய்துள்ளனர். இச்சந்திப்பு நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளதாக சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
இதன்போது பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து மோதல்களுக்கு தீர்வு காண்பது குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும் பொதுத் தேர்தலில் பலமான கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பிலும் ஆழமாக ஆராயப்படுமெனவும் சு.கவின் தகவல் அறியும் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்குவதற்காக பொதுஜன பெரமுனவுடன் சு.க உடன்படிக்கையொன்றை செய்துக்கொண்டது. குறித்த உடன்படிக்கையில் பொதுத் தேர்தலில் பரந்துபட்ட கூட்டணியொன்று அமைக்கவும் கதிரை சின்னத்தில் தேர்தலை சந்திக்கவும் இணக்கம் காணப்பட்டிருந்தது. இதனை இருதரப்பினரும் கூட்டாகவும் அறிவித்திருந்தனர். என்றாலும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இரு கட்சிகளுக்கும் இடையில் கருத்து மோதல்கள் உக்கிரகட்டத்தை எட்டியுள்ளன. பொதுத் தேர்தலில் மொட்டு சின்னத்திலேயே போட்டியிட வேண்டுமென பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளதோடு சு.க தனித்து போட்டியிட்டு பின்னர் தங்களுடன் இணைய வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.